'டிக் டாக்' செயலியை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'டிக் டாக்' செயலியை இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏப்ரல் 3ஆம் தேதி 'டிக் டாக்' செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 'டிக் டாக்' நிறுவனம் தரப்பில், 'டிக் டாக்' செயலியால் எந்த விதமான தவறும் நடக்கவில்லை. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக 'டிக் டாக்' செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே 'டிக் டாக்' செயலிக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கை ஏற்க மறுத்த நீதிமன்றம், 'டிக் டாக்' செயலியை தடை செய்த உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது எனக் கூறியது. மேலும் செயலி மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு, நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமாறு கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில் 'டிக் டாக்' செயலியை இந்தியாவில் கூகுள் நிறுவனம் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், ஆப்பிள் தளங்களில் 'டிக் டாக்' செயலி இன்னும் உள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவோம். தனிப்பட்ட செயலிகள் தொடர்பாக நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவனமோ, இது குறித்து கருத்து கூற மறுத்து விட்டது.