சீக்கியர்களின் பத்து மதகுருக்களின் போதனைகள் இடம்பெற்ற ஸ்ரீ குரு கிரான்த் சாகிப் புத்தகம் அவர்களின் மத வழிபாட்டின் முக்கிய புனித நூலாகக் கருதப்படுகிறது. இப்புத்தகம் உருவாக்கப்பட்டு, 415 ஆண்டுகள் நிறைவடைந்ததை பஞ்சாப் மக்கள் அமிர்தசரஸிலுள்ள பொற்கோவிலில் கொண்டாடி வருகின்றனர்.
பிரகாஷ் பர்வ் எனப்படும் இந்த விழாவில், சீக்கியர்கள் தங்களின் பாரம்பரிய உடையான நீல நிற டர்பனை அணிந்துகொண்டு, சீக்கியர்களின் ஐந்தாம் குருவான ராம்சார் சாகிப்பிற்கான ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில், சீக்கியர்கள் பாரம்பரிய இசைகளை முழங்கி, வீர வாள்களைக்கொண்டு பல்வேறு சண்டைகளையும் நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகளும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி பஞ்சாபின் பல்வேறு பகுதிகளிலும் கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும், சீக்கியர்கள் இந்த விழாவை மிகுந்த ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடுகிறார்கள். இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்காக பொற்கோயிலின் முழுப் பகுதிகளும் அலங்கரிக்கப்பட்டு வண்ண விளக்குகள் ஏற்றப்பட்டு மிளிர்கிறது. மேலும்,பக்தர்களும் மெழுகுவர்த்திகள், மண் விளக்குகளையும் ஏற்றி தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.