கார்கில் போர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற பிறகு, முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க கார்கில் ஆய்வுக் குழு பரிந்துரை செய்தது. இருந்தபோதிலும், பின்னர் ஆட்சி அமைத்த அரசுகள் இப்பதவியை உருவாக்காமல் இருந்தது. இதையடுத்து, மோடி தலைமையிலான பாஜக அரசு இப்பதவியை உருவாக்கு முடிவெடுத்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதலும் அளித்தது.
இந்நிலையில், ராணுவத் தளபதியாக இருக்கும் பிபின் ராவத்தை முப்படைகளின் தலைமை தளபதியாக மத்திய அரசு நியமித்தது. இன்று ராணுவ தளபதியாக ஓய்வுபெறவுள்ள பிபின் ராவத், நாளை முப்படைகளின் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிபின் ராவத் அஞ்சலி செலுத்தினார்.
பாதுகாப்புத்துறை அமைச்சரின் தலைமை ஆலோசகராக முப்படைகளின் தளபதி விளங்குவார். மேலும், புதிதாக உருவாக்கப்படவுள்ள ராணுவ விவகாரத்துறையின் தலைவராகவும் இவரே திகழ்வார். இரண்டு மூத்த ராணுவ அலுவலர்களை பின்தள்ளிவிட்டு பிபின் ராவத் 2016ஆம் ஆண்டு ராணுவ தளபதியாக பொறுப்பெற்றார்.
இதையும் படிங்க: நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள பெட்லாட் நகரம்!