டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கு மே 12ஆம் தேதி ஆறாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் டெல்லி கிழக்குத் தொகுதியில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி டெல்லியின் ஜங்க்புரா பகுதியில் கவுதம் கம்பீர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். ஆனால், அவர் அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கம்பீர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மாவட்டத் தேர்தல் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அனுமதியின்றி பரப்புரை கூட்டங்களை நடத்தக் கூடாது என்றும் கம்பீருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்துள்ளதாக கம்பீர் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் அடிஷி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
மார்ச் 22ஆம் தேதி பாஜகவில் இணைந்த கம்பீருக்கு உடனே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.