பிரபல நிழலுலக தாதா ரவி பூஜாரி, 200க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர். நீண்டகாலமாக தலைமைறைவாகியிருந்த இவரை, அண்மையில் செனகல் நாட்டிலிருந்து காவல்துறையினர் இந்தியா அழைத்து வந்தனர்.
இவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலர்கள், பெங்களூரில் வைத்து விசாரித்துவரும் நிலையில் மும்பைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், தன்னை பெங்களூரில் வைத்தே விசாரிக்க வேண்டும் எனவும், மும்பைக்கு கொண்டுசெல்லவேண்டாம் எனவும் ரவி பூஜாரி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மும்பையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவி பூஜாரி, தாவூத் இப்ராஹிமுக்கு நெருக்கமானவர். எனவே, மும்பை காவல்துறையினர் அவரை கொடுமையான முறையில் விசாரிப்பார்கள் என்ற அச்சம் கொண்டு, இந்த கோரிக்கையை ரவி பூஜாரி முன்வைத்துள்ளார்.
கடந்த 2000ஆம் ஆண்டு காலகட்டத்தில், பாலிவுட் திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்களிடமிருந்து மிரட்டிப் பணம் பறித்து, பின்னர் கொலை சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கிய ரவி பூஜாரி, மும்பையைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரிய வருகிறது.
பின்னர் நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பை விரிவுபடுத்திக் கொண்ட பூஜாரி, இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்துள்ளார். அதன்பின்னர் செனகல் நாட்டிற்கு குடிபெயர்ந்த அவர், அந்தோணி பெர்னான்டஸ் என்ற பெயரில் போலியான கடவுச்சீட்டு மூலம் வெளிநாடுகளில் வாழ்ந்து வந்துள்ளார்.
தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையை காணொலியாக பதிவு செய்ய வேண்டும் என பெங்களூரு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனைவி பேச்சை கேட்பாரா ஷாருக்கான்?