டெல்லி தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல யோகா குரு ராம்தேவ் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய ராம்தேவ், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து உரையாற்றினார். காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பல்வேறு சதிவேலைகளை செய்துவருகிறது என்றார். அமித் ஷா சிறைக்கு செல்ல பின்னாலிருந்து செயல்பட்டது காந்தி குடும்பம்தான் என்றும் தற்போது பிரதமர் மோடியும் அமித் ஷாவும் உயிரோடு இருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்பியதில்லை எனவும் சாடினார்.
அமித் ஷா சிறையிலேயே இறக்க வேண்டும் என்று காந்தி குடும்பத்தினர் விரும்பியதாகவும் ராம்தேவ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டத்தை மீறுவதும் தெய்வீகமான ஆட்சியை அவமதிப்பதும் மன்னிக்க முடியாதது என்றார். ப. சிதம்பரம் சட்டத்தை உடைத்துவிட்டதாகவும் அதன் காரணமாகவே இன்று அவர் சிறைவாசம் அனுபவிக்கிறார் என்றும் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒன்றும் மிகப்பெரிய வசதி படைத்தவர் கிடையாது என்று தெரிவித்த ராம்தேவ், மோடி ஒரு சாதாரண மனிதர், நாட்டின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கிறார் என்றும் புகழாரம் சூட்டினார்.