200க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபல நிழல் உலக தாதா ரவி பூஜாரி, செனகல் நாட்டிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த மற்றொரு தாதா சோட்டா ராஜனுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில், இவர் மீது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், இவர் நாளை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
2000ஆம் ஆண்டு காலகட்டத்தில் பாலிவுட் திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்களிடமிருந்து மிரட்டிப் பணம் பறித்து, பின்னர் கொலை சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கிய ரவி பூஜாரி, மும்பையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரிய வருகிறது.
பின்னர் நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பை விரிவுபடுத்திக்கொண்ட பூஜாரி, இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று தென்னாப்ரிக்காவில் வாழ்ந்துள்ளார். அதன்பின்னர் செனகல் நாட்டிற்கு குடிபெயர்ந்த அவர், அந்தோணி பெர்னான்டஸ் என்ற பெயரில் போலிக்கடவுச்சீட்டு மூலம் வெளிநாடுகளில் வாழ்ந்து வந்துள்ளார்.
போலிக் கடவுச்சீட்டு காட்டிய குற்றச்செயலுக்காக செனகல் காவல் துறை பூஜாரியை கைது செய்யவே, இந்திய உளவுத்துறை அவரை இந்தியா மீட்டு வரும் முயற்சியில் களமிறங்கியது. அதைத் தொடர்ந்து மும்பை பெங்களூரைச் சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரிகள் குழு செனகல் விரைந்து ரவி பூஜாரியை இந்தியா மீட்டு வந்துள்ளது.
ரவி பூஜாரியுடன் அவரது மனைவி, மூன்று பிள்ளைகளும் போலிக் கடவுச்சீட்டின் மூலம் வெளிநாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: பற்றவைத்தால் பர்கர் வாசனை: மெக்டொனால்டின் புதிய யுக்தி