கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாடான ஈரானை மிக மோசமாகப் பாதித்துள்ளது. இந்நிலையில் ஈரான் நாட்டிற்கு புனித பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் 103 பேரும், மாணவர்கள் 131 பேரும் சிக்கிக் கொண்டனர். ஈரானில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேலாக நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 611 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில், ஈரானின் தெஹ்ரான், ஷிராஸ் நகரிலிருந்து நான்காவது கட்டமாக, இந்திய மாணவர்கள், ஆசிரியர் உட்பட 53 பேர் அடங்கிய குழு மீட்கப்பட்டது. இந்த குழு இன்று காலை இந்தியா வந்து சேர்ந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். மத்திய அரசு பாதுகாப்பு காரணங்களுக்காக, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மாரில் இவர்களைத் தனிமைப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிக்கும்போது, நான்காவது கட்டமாக இந்த மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஈரானிலிருந்து, 389 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தப் பணியில் ஈடுபட்ட இருநாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் நன்றி, என்றார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் இருந்த முதியவர் உயிரிழப்பு!