உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் 1,395 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 22 பேர் உயிரிழந்ததாக அம்மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது.
தொற்றுநோய் பரவலில் இரண்டாம் கட்ட ஆபத்து நிலையை அடைந்திருக்கும் ராஜஸ்தானில் 12 மண்டலங்கள், கோவிட்-19 பெருந்தொற்றின் சிவப்பு குறியீட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு வேகமாக முன்னெடுத்துவருகிறது.
ராஜஸ்தானில் பள்ளி-கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப்போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என அம்மாநில அரசு ஊரடங்கிற்கு உத்தரவிட்டது.
இதன் ஒரு பகுதியாக, சமூக இடைவெளியைப் பின்பற்றும் நோக்கில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான குல்சார் இன மக்கள் வருகைபுரியும் புகழ்பெற்ற அஜ்மீர் ஷெரீஃப் தர்காவில் வழிபாடுசெய்ய தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சுல்தான் ஹஸ்ரத் குவாஜா மொய்னுதீன் ஹசன் சிஷ்டியின் மூலமாக ஏக இறைவனின் கருணையை கோரும் பல்வேறு மத நம்பிக்கைக்கொண்ட மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது.
ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அங்கு வழிபாடு மேற்கொள்ள சென்ற நான்காயிரம் யாத்ரீகர்கள் அஜ்மீரில் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் தர்கா அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் உள்ளூர் அமைப்புகள், தன்னார்வலர்கள் உதவியுடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அஜ்மீரில் சிக்கி இருக்கும் நான்காயிரம் யாத்ரீகர்கள் குறித்து அறிக்கையை தயார் செய்திருக்கும் தர்கா குழு அதனைப் பிரதமர் அலுவலகத்திற்கு அளித்து அவர்கள் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளதாக அறிய முடிகிறது.
அஜ்மீரில் சிக்கியுள்ள யாத்ரீகர்களில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பயணிகள்தான் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர்.
இதையும் படிங்க : மதுபான குடோனில் மதுபாட்டில்கள் திருட்டு: இருவர் கைது!