இந்திய அரசின் திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினரான வைத்தியநாதன் நேற்றிரவு கோவையில் காலமானர்.
சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் 1956ஆம் ஆண்டு அவரது வகுப்புத் தோழனான (அப்போதைய பயனீட்டு பொருளாதார முன்னாள் நிதித்துறை அமைச்சர்) அசோக் மித்ராவுடன் இணைந்து பணியாற்றினார்.
இவர் சென்னை மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்திலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள மேம்பாட்டுக் கல்வி நிலையத்திலும் பேராசிரியராக பணியாற்றினார்.
1962 முதல் 1972 வரை இந்திய அரசின் திட்டக்குழுவில் முன்னோக்கு திட்டமிடல் பிரிவில் பணியாற்றினார். 1969 முதல் 70 வரை கே.என்.ராஜ்-இன் விவசாயத்திற்கான வருமான வரி விதிப்புக்கான குழுவிலும், 2004 ஆம் ஆண்டில் கூட்டுறவு கடன் நிறுவனங்களின் மறுமலர்ச்சி தொடர்பான இந்திய அரசின் பணிக்குழுவின் தலைவராகவும் இருந்தார். இவர் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநில அளவிலான திட்டமிடலிலும் இணைந்து செயல்பட்டார்.
இந்தியாவின் புள்ளிவிவர முறை மற்றும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டார். இவரது முக்கிய சில அறிவறுத்தல்களால் விவசாயக் கொள்கை, நீர் மேலாண்மை உள்ளிட்ட துறைகள் வளர்ச்சி பெற்றன. மேலும் இவர், இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.
2008ஆம் ஆண்டு மும்பையின் தாஜ் ஹோட்டல் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் தப்பியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.