கர்நாடகா பாஜக தலைவர் யோகேஷ் கவுடா 2016 ஆம் ஆண்டு, ஜூன் 15 ஆம் தேதி தார்வாட் மாவட்ட உடற்பயிற்சி கூடத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர், வழக்கில் தொடர்புடையதாக 6 பேர் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாகக் கர்நாடக முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னியை மத்திய புலனாய்வுத் துறை நவம்பர் 5 அழைத்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் குல்கர்னியை காணொளி மூலம் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது மேலும் 3 நாட்களுக்கு அவரை விசாரணைக்கு அனுப்புமாறு மத்திய புலனாய்வுத் துறை நீதிபதிகளுக்குக் கோரிக்கைவைத்தது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதிகள் வரும் 23ம் தேதி வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டனர்.
குல்கர்னிக்கு பாலிகிராப் சோதனைக்கு அனுமதி வழங்குமாறு சிபிஐ அலுவலர்கள் வைத்த கோரிக்கையும் நீதிமன்றம் நிராகரித்தது. முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து உண்மைகளை வரவழைக்க உண்மை கண்டறியும் சோதனை (நார்கோ சோதனை), மூளை வரைபட சோதனை மற்றும் பாலிகிராப் சோதனைகள் நடத்துவதை காவல்துறையினரும், புலனாய்வு நிறுவனத்தினரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.