இந்திய, சீன எல்லையான லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில், மத்திய அரசை சிவசேனா தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், லடாக் பிரச்னையில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள வார்த்தைப் போர் மக்களை சோர்வடையச் செய்துள்ளது, எனவே, இவ்விவகாரங்களில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான சாம்னாவில், "சீனா பிடிவாதமாக உள்ளது. அது மாறவும் மாறாது. பழையவற்றை மறந்து புதிய பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும். நாட்டிற்கு புதிய எதிர் காலத்தை உருவாக்கித்தர வேண்டும்" என செய்தி வெளியாகியுள்ளது.
கரோனா, சீனாவுக்கு எதிரான போர் ஆகியவற்றில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வெற்றி அடையும் என அமித் ஷா கூறிய கருத்துக்கு பதிலடி தந்துள்ள சிவ சேனா, "கரோனா, சீனாவுக்கு எதிரான போருக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டுமே தவிர, எதிர்க்கட்சியை எதிர்த்து அல்ல. எதிர்க்கட்சியினர் தொடுக்கும் கேள்விகளால் அதிர்ந்து விடக் கூடாது" எனவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து சாம்னாவில், "கரோனா விழிப்புணர்வு காலர் டியூனால் மக்கள் எந்த அளவுக்கு சோர்வடைந்தார்களோ அதே அளவு சீன விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கிடையே நடைபெறும் வார்த்தைப் போரால் சோர்வடைந்துள்ளனர். காலர் டியூன் மாற்றப்பட வேண்டும். கல்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறி ஊடுருவி சட்ட விரோதமான கூடாரங்களை அமைத்துள்ளது. ஆனால், சீனாவுக்கு பதிலடி தராத மத்திய அரசு, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை விமர்சித்து வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய-சீன எல்லை விவகாரம்: மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை