நாட்டின் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக பிகார், அஸ்ஸாம் மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு தீவிரத்தன்மை வெகுவாகவுள்ளதால் இரு மாநிலங்களும் முற்றிலுமாக முடங்கியுள்ளன.
வெள்ளத்தின் தீவிரத்திலிருந்து அஸ்ஸாம் மாநிலம் மெல்ல இயல்புக்குத் திரும்பிவரும் நிலையில், பிகார் மாநிலத்தில் நிலைமை மோசமாகவே உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, பிகாரில் வெள்ளம் காரணமாக 56.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; தீவிர பாதிப்பைச் சந்தித்த 14 மாவட்டங்களைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாநிலப் பேரிடர் நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.
தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு, பிகார் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த 23 சிறப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ள பாதிப்புப் பகுதியில் சிக்கியிருந்த 4.18 லட்சம் பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
பிகாரின் தர்பாங்கா மாவட்டம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக மேற்கு சம்பாரன், முசாபர்பூர் ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்பைச் சந்தித்ததாகவும் அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 5ஆம் தேதியும், பாஜக எடுத்த முக்கிய முடிவுகளும்!