வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தெலங்கானாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்தது. மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மீட்புப் பணிகளில் ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டிருக்கும் நிலையில், தற்போது ராணுவத்தினரும் களமிறங்கியுள்ளனர். மாநில அரசின் கோரிக்கையினை ஏற்ற ராணுவம், பண்ட்லகுடா பகுதியில் வெள்ள நிவாரணம், மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், வெள்ள பாதிப்புக் குறித்து ஆராய மத்திய அரசு ஒரு குழு அமைத்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், "கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் லட்சக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டன. உணவுப் பொருள்கள், உடைமைகள் ஆகியவை முழுமையாக சேதமடைந்தன.
வெள்ள பாதிப்புக் குறித்து ஆராய மத்திய அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லும் அக்குழு சேதம் குறித்து ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பு உள்ளது. அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசுக்கு உதவி அளிக்கப்படும். அதுவரை மாநில அரசு மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநில பேரிடர் மீட்புக் குழுவினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
ஹைதராபாத்தில் இதுவரை 37 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளி பாதிப்பால் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் கே டி ராமாராவ் தெரிவித்துள்ளார்.