ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகரித்துவரும் நக்சல் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் காவல் படையினருடன்(சிஆர்பிஎஃப்) இணைந்து நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான கோப்ரா சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் நேற்று (நவ. 28) சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள சுக்மா மாவட்டத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது சிந்தாபுகா வனப்பகுதியில் நக்சல்களுக்கும், மத்திய ரிசர்வ் காவல் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
பின்னர் நக்சல்கள் நடத்திய குண்டு வெடிப்பில் சிஆர்பிஎஃப் கோப்ரா 206 பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த உயர் அலுவலர், உதவி கமாண்டர் உள்பட பத்து பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ராய்ப்பூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.
இந்நிலையில், சிஆர்பிஎஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோப்ரா 206 பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த உதவி கமாண்டர் நிதின் பி பெலிரோ என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது. மீதமுள்ள ஒன்பது பேர் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிகாரில் நக்சலை சுட்டுக்கொன்ற கோப்ரா கமாண்டோஸ்!