167 ஆண்டுகளுக்கு முன், இதே தினத்தில் இந்தியன் ரயில்வேயின் முதல் சேவையானது மும்பை - தானே வழித்தடத்தில் இயக்கப்பட்டது. இதுவரை, 166 பிறந்த நாளைக் கொண்டாடிய இந்தியன் ரயில்வே, முதன் முறையாக தனது பிறந்த நாளை விசித்திரமான முறையில் கொண்டாடும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து அன்று தொடங்கி வரும் மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதன் காரணமாக இந்தியன் ரயில்வே, பயணிகள் சேவைகளை முற்றிலுமாக நிறுத்தி வைத்துள்ளது. முக்கியமாகக் கருதப்படும் அத்தியாவசிய சரக்கு போக்குவரத்தை மட்டுமே, ரயில்வே தற்போது மேற்கொண்டு வருகிறது.
எனவே, இந்திய ரயில்வே வரலாற்றில் முதன் முறையாக ரயில்வேயின் பிறந்த நாளில் பயணிகள் இல்லாமல் இயங்கும் நிலை உருவாகியுள்ளது. இதை இந்திய ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்து இந்தப் பேரிடரை எதிர் கொள்ள வேண்டும் என்று ட்விட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக தற்போதைய நிலவரப்படி, 15 ஆயிரத்து 523 ரயில்கள் மூலம் அன்றாடம் 2 கோடி பயணிகளுக்கு வழங்கிய சேவையை ரயில்வே முடக்கியுள்ளது.
இதையும் படிங்க: பழங்குடி மக்கள் இயக்கத்திற்கு மத்திய அரசு அனுமதி