அண்மையில், ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தின் சுபன்சிர் விடுதிக்குச் செல்லும் சாலைக்கு இந்து மகா சபையின் நிறுவனர் சாவர்க்கரின் பெயரை சூட்டி பெயர் பலகை ஒன்றை பல்கலைக்கழக நிர்வாகம் நிறுவியது. அந்த பெயர் பலகையில் இருந்த சாவர்க்கர் பெயர் அழிக்கப்பட்டு அம்பேத்கர் என அடையாளம் தெரியாத நபரால் எழுதப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர், முதல் விசாரணை அறிக்கையில் 'பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக' வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜே.என்.யூ துணைவேந்தர் மமிதலா ஜகதீஷ் குமார், “ஒருவரின் கருத்துக்களோடு உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதனை கருத்தால் தான் எதிர்க்கொள்ள வேண்டுமே ஒழிய அவதூறுகளால் அல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எங்களின் சில மாணவர்கள் இப்போது பொது சொத்துக்களை சேதப்படுத்துகிறார்கள். இது போன்ற விஷயங்கள் விரும்பத்தகாதவை.
1000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் ஜே.என்.யூ வளாகத்திற்குள் பல சாலைகள் அமைந்துள்ளன. வளாக மேம்பாட்டுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு சாலைகளுக்கு சிறந்த ஆளுமைகளின் பெயர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. 2016 ஆம் ஆண்டிலிருந்து இந்த பெயர் வைக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் நடைமுறைப்படி வைக்கப்பட்ட பெயர் பலகையின் மீது இப்படி செய்தது விரும்பத்தகாதவை மட்டுமல்ல, மிகவும் வருந்தத்தக்கது" என தெரிவித்தார்.
இந்த செயலை இடதுசாரி மாணவர்கள் தலைமையிலான ஜே.என்.யூ மாணவர் சங்கம் (ஜே.என்யூ.எஸ்.யூ) தான் செய்திருக்க வேண்டுமென அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) குற்றம்சாட்டியிருக்கிறது.
கடந்தாண்டு ஆகஸ்டில், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலுக்கு முன்னதாக ஏபிவிபி மாணவத் தலைவர் சக்தி சிங், டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் உள்ள பல்கலைக்கழக கலை பீடத்தின் வாயிலுக்கு வெளியே பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றி வீர சாவர்க்கருக்கு மார்பளவு சிலை ஒன்றை நிறுவினார். இதனைப் பல்வேறு மாணவர் பிரிவுகளும் ஒருங்கிணைந்து எதிர்த்தன. காங்கிரசின் மாணவர் பிரிவான என்.எஸ்.யூ.ஐ. சாவர்க்கரின் சிலைக்கு கறுப்பு மை பூசியதைத் தொடர்ந்து அந்தச் சிலை வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற கோகாய்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு