மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதியில், சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக, தேர்தலை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, இன்று (ஏப்ரல் 23ஆம் தேதி) மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவோடு, திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், அத்தொகுதிக்குட்பட்ட ராஜதன்பரா (Rajadhanpara) என்னும் குக்கிராமத்தை கடந்த ஒரு வாரமாக கடும் காய்ச்சல் வாட்டி வருகிறது. இதனால், அக்கிராம மக்கள், வாக்களிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அக்கிராமத்தில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் காய்ச்சலால் தவித்து வருகின்றன. இருப்பினும், எந்த மருத்துவரோ, அரசு அலுவலரோ எங்களைச் சந்திக்க வரவில்லை. தேவையான மருந்துகளை நாங்களே வாங்கிக் கொள்கிறோம். எங்களின் அவல நிலை குறித்து அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை" எனக் குற்றம் சாட்டினார்.