டெல்லி: எந்தவித எதிர்ப்புமின்றி மாநிலங்களவையில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விவாதத்தில், இந்த சட்டம் என்ஜிஓக்களுக்கு எதிரானதல்ல என உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
அதிமுக எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் இந்த சட்டத்தால் என்ஜிஓக்கள் பாதிக்கப்படுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நித்யானந்த் ராய், இந்த சட்டம் என்ஜிஓக்களுக்கு எதிரானதல்ல, இது வெளிப்படைத்தன்மையை பாதுகாப்பதற்கான முயற்சி. நாட்டுக்கு நல்லது செய்யும் அரசு சாரா அமைப்பை வளர்த்தெடுப்பதற்கான முயற்சி என்றார்.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் என்பது தேசிய மற்றும் உள் பாதுகாப்பை மனதில் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நம் நாட்டின் அரசியலில் கலகம் விளைவிக்க அளிக்கப்படும் வெளிநாட்டு நிதிகள் தடுக்கப்படும் என தெரிவித்தார்.
இது என்ஜிஓக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் என்பது சில என்ஜிஓக்களின் கருத்தாக உள்ளது. இதனால் என்ஜிஓக்கள் பணிகளின் முன்னேற்றத்துக்கான நிதி, அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்டவை தடைபடும் என கூறப்படுகிறது. அரசு தகபலின்படி, 2010 - 2019ஆம் ஆண்டுகளுக்கிடையே என்ஜிஓக்களின் வெளிநாட்டு நிதி இருமடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அதை அவர்கள் குறிப்பிடும் விஷயங்களுக்கு சரிவர பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
என்ஜிஓக்களுக்கு 50% பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு நிதி, இந்த சட்டத்தின் மூலம் 20% என குறைக்கப்பட்டுள்ளது. இதையே என்ஜிஓக்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.