ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த மாநிலத்தின் சில முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். அதில், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் முக்கியமானவர்கள்.
செப்டம்பர் 15 ஆம் தேதியில் ஃபரூக் அப்துல்லாவிற்கு வீட்டு சிறை முடியும் தருவாயில், அவர் மீது பொது பாதுகாப்பு சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஃபருக் அப்துல்லா வீட்டு காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பிற தலைவர்களையும் விடுவிக்க வேண்டுமென சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், ”நாடாளுமன்ற உறுப்பினர் ஃபருக் அப்துல்லாவை தடுப்புக் காவலில் வைத்தது சட்டத்திற்கு புறம்பானது. அதுவும் பொது பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைத்தது தவறான நடவடிக்கை. நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானதும்கூட. இது அவருடைய ஜனநாயக உரிமையின் மீது நடைபெற்ற தாக்குதல். அதனால்தான், நாங்கள் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தினோம்.
ஃபரூக் 7 மாத கால வீட்டு சிறைவாசத்தை நிறைவு செய்த பின் விடுவிக்கப்பட்டிருக்கிறார். தற்போது, ஃபருக் விடுதலையானாலும், மற்றவர்கள் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களையும் கூடிய விரைவில் விடுவிக்க வேண்டும், என்றார்.
விடுதலையான ஃபருக் அப்துல்லா பேசுகையில், ”எங்களின் சுதந்திரத்துக்காக பிரார்த்தனை செய்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என்றும் நம்புகிறேன். மற்றவர்கள் விடுதலை செய்யப்படுகிறவரை, எவ்விதமான அரசியலும் ஈடுபட மாட்டேன்” என்றார்.
இதையும் படிங்க: கொரோனா தொற்று: அமெரிக்க - சீனா நாடுகளுக்கிடையே முற்றிய பிரச்னை