தொலைக்காட்சியின் பார்வையாளர்களைக் கணக்கிட டிஆர்பி ரேட்டிங் உதவுகிறது. இதனை வைத்தே தொலைக்காட்சியின் பிரபலத்தை மக்கள் அறிகிறார்கள். இதன் அடிப்படையிலேயே விளம்பர வருவாய் அதிகரிக்கிறது. இந்நிலையில், ரிபப்ளிக் உள்பட மூன்று சேனல்கள் தங்களின் வருவாயை அதிகரிக்க, டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து மோசடியில் ஈடுபட்டதாக மும்பை காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்துவதற்கு ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை நிதி அலுவலர் சிவசுப்ரமணியம் என்பவருக்கு மும்பை காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனை மும்பை குற்றப்பிரிவு இணை ஆணையர் மிலிந்த் பரம்பே உறுதி செய்துள்ளார்.
டிஆர்பி மோசடி குறித்து விசாரணை நடத்துவதற்காக ரிபப்ளிக் தொலைக்காட்சியுடன் சேர்த்து ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா, சில விளம்பர நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மும்பை குற்றப்பிரிவு காவலர்கள், ஏற்கனவே ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா நிறுவனங்களைச் சேர்ந்த நான்கு பேரைக் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருப்பது மோடியின் அறியாமை அல்ல - வேறொரு காரணத்தை சொல்லும் ராகுல் காந்தி