2019-20ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(5/6/2019) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தொடர்பாக நமது ஈடிவி பாரத்திற்கு நிர்மலா சீதாராமன் பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அப்போது, பாஜக அரசு பணவீக்கத்தைச் சிறந்த முறையில் கட்டுப்படுத்துவதாக பல பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளதாகவும், இது ரிசர்வ் வங்கியின் பணவீக்க நிர்வாகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் கூறினார்.
பாதுகாப்புத் துறை:
பாதுகாப்புத் துறைக்கான செலவினங்கள் உயர்ந்திருப்பதாகவும், பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,12,079.57 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதேபோல், ஒட்டுமொத்த மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்காக 15.47 விழுக்காடு, அதாவது ரூ.4,31,010.79 கோடி ஒதுக்கப்படுள்ளதாகவும் கூறினார்.
கவ்வி:
கல்வித்துறை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்போதுள்ள இந்திய கல்வி முறையை தேசிய கல்விக் கொள்கை 2019க்கு இணையாக மேம்படுத்த தேசிய ஆராய்ச்சி நிதி (என்ஆர்எஃப்) என்று தனியாக உருவாக்கப்படும் என்றும், அதன் மூலம் நாடு முழுவதும் ஆராய்ச்சிகள் அதிகரிக்கும் என்று தெரிவித்தார். மேலும், வெளிநாட்டினர் இந்தியாவில் கல்வி கற்பதை ஊக்குவிக்க ‘ஸ்டடி இன் இந்தியா’ என்கிற புதிய முயற்சி முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஸ்டார்ட்-அப்:
ஸ்டார்ட்-அப் கம்பெனிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ முன்னெடுப்பு பெரிய வெற்றி பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், ஸ்டார்ட்-அப் கம்பெனிகளிடம் வசூலிக்கப்பட்டு வந்த ஏஞ்சல் வரியில் உள்ள பிரச்னைகள் களையப்பட்டுவிட்டதாகவும் ஸ்டார்ட்-அப் கம்பெனிகளுக்கு முழு வரி சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பட்ஜெட்டில் அடையக்கூடிய இலக்குகளையே தாக்கல் செய்துள்ளதாகவும் முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக, 1.05 லட்சம் கோடி ரூபாய் அரசு பொதுத்துறைப் பங்குகளை விற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதும் அடையக்கூடிய இலக்கு தான் எனவும் விளக்கமளித்துள்ளர்.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள்:
வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (என்.பி.எஃப்.சி) ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து, மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருவதாகவும் இவர் கூறியுள்ளார். மேலும், இதை விரிவான அணுகுமுறையில் அரசு கையாள்வதாகவும், வங்கி சாரா நிதி நிறுவனங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அரசு சிந்தித்து வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
கார்ப்பரேட் துறை வரி:
ரூ.400 கோடிக்கும் குறைவான வருவாய் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரிகளை 25 சதவீதமாகக் குறைத்துள்ளதாகவும், இதன்மூலம் பாஜக அரசு, பெருநிறுவனங்களிடம் வரி விஷயத்தில் கடுமையாக இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.