கேள்வி: தோட்டாவுக்கு எதிராக பர்ஸ் என்ற சிந்தனை, தங்களுக்கு எவ்வாறு உதித்தது?
பதில்: நான் லடாக்கில் பிறந்து வளர்ந்தேன். சிறு வயதில் இருந்தே சீனாவின் வல்லாதிக்க முரட்டுத்தனம் மற்றும் ஊடுருவல் என அனைத்தையும் பார்த்து வந்திருக்கிறேன். லடாக் நிலப்பரப்பு எனக்கு நன்றாகத் தெரியும். அவ்வப்போது சீனா நிகழ்த்தும் அட்டூழியத்தை என்ன பெயரில் வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். இதனால் லடாக் மக்களுக்குத் தான் துயரம். எல்லை தாண்டிய சீன ஊடுருவலால் லடாக் மக்கள், குறிப்பாக ஆடு மேய்ப்பவர்கள், மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். தினமும் மேய்ச்சலுக்கு மந்தையை ஓட்டிச் செல்லவேண்டும். ஆனால் சீன ஆக்கிரமிப்புகளால், அவர்களின் மேய்ச்சல் நிலத்தின் பரப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. மேய்ச்சலுக்கு நிலமின்றி சிரமப்படுகிறார்கள். இது தொடர்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு நீண்ட காலமாகவே என்னுள் உள்ளது.
சீனாவின் தற்போதைய ஊடுருவலும் ஆக்கிரமிப்பும் எதேச்சையான செயல் அல்ல, மாறாக இம்முறை தெளிவான செயல் திட்டத்துடன் ஒரு தீய உள்நோக்கத்துடன் நிகழ்த்தப்படுவது என்பதை நான் புரிந்துகொண்டேன். அவர்களின் நோக்கம், எல்லையில் சில்மிஷம் என்பதையும் தாண்டிய ஒன்று என யூகிக்க முடிந்தது. காரணம், கோவிட்-19 என்னும் பெருந்தொற்று உலகையே உலுக்கி வரும் இந்த வேளையில் எந்த ஒரு நாடும் செய்யத் துணியாத காரியத்தை சீனா செய்கிறது.
இந்தியாவை மட்டுமல்ல, வியட்நாம், தைவான் மற்றும் அமெரிக்க கடற்படை, என பலரையும் தென் சீனக்கடலில், சீனா ஆத்திரமூட்டி வருகிறது என்பதையும் புரிந்துகொண்டேன். சீனாவின் இந்த வரம்புமீறிய செயல்பாடுகளின் பின்னணியில் வேறு ஏதோ காரணம் இருக்கிறது. ஏனென்றால், இவை அனைத்தும் ஒருமாத கால அளவில் நடந்துள்ளன. இவற்றைக் கூர்ந்து நோக்கும்போது, அவர்கள் தங்கள் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு தீர்வு காண இத்தகைய நடவடிக்கைகளை கையாளுகிறார்கள் என்பது தெளிவாகும். கரோனா பெருந்தொற்றை சரிவர கையாளும் திறமை இல்லாமல் தோல்வியடைந்து, பொருளாதாரத்தையே சீரழித்துவிட்டது அரசு என்ற கோபம் சீன மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. எனவே, அரசின் தவறுகளை மறைத்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, எல்லையில் வாலாட்டுகிறது. சீனாவின் நோக்கம் குறித்து நாமும் ஒரு முடிவுக்கு வரலாம்.
சரிவில் இருந்து தனது பொருளாதாரத்தை மீட்கவே சீனா இதுபோன்ற முயற்சிகளில் இறங்கியுள்ளது என்றபோது, நாமும் தகுந்த பதிலடி தரவேண்டும். நாம் தரும் பதிலடி, சீன பொருளாதாரத்தை நிலகுலைய வைப்பதாக இருக்க வேண்டும். துப்பாக்கியும் தோட்டாவும் நமது எதிர்வினையாக இருக்கவேண்டும் என்பதே சீனாவின் எதிர்பார்ப்பு. ஆனால், அவர்கள் விரித்த வலையில் நாம் வீழ்ந்துவிடக்கூடாது. சீனாவின் பொருளாதாரம் பின்னடைந்து வருவது அவர்களுக்குப் பெரும் கவலை தரும் நிலையில், நாம் ஏன் பொருளாதார தளத்தில் தாக்குதல் தொடுக்கக்கூடாது?
ஆகவேதான், இந்த பொருளாதார தாக்குதலை மக்கள் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஆயுதம் ஏந்த வேண்டியதில்லை, நமது கரங்களில் உள்ள பர்ஸ் போதும். இந்திய மக்களே இதனை செயல்படுத்த களமிறங்க வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த கிராமத்தில் உள்ள வீட்டிலோ, நகரத்திலோ எந்த மூலையில் இருந்தாலும் சீன செயலிகளை உங்கள் அலைபேசியில் இருந்து நீக்கிவிடலாம். சொல்லப்போனால், இது மிகவும் எளிதானது, சாதாரனமானது என்று தோன்றலாம். ஆனால், மக்களின் பேராதரவுடன் இதுவே மிகப்பெரும் அளவில், லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் நிகழ்ந்தால், சீனாவுக்குப் பலத்த அடியாகும். அவர்கள் எதற்காக அச்சப்படுகிறார்களோ அதனை நேரில் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வரும். பின்னடைவச் சந்தித்து சரிந்து வரும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, சீன மக்களுக்கு அரசின் மீதான அதிருப்தியும் அதிகரிக்கும்.
கேள்வி: உங்கள் நோக்கமும் குறிக்கோளும் புரிகிறது. ஆனாலும் ஒரு கேள்வி. சீனப்பொருள்களையும், செல்போன் செயலிகளையும் புறக்கணிப்பது நடைமுறையில் சாத்தியமா? அவ்வளவு எளிதானதா? இந்தியாவில் மட்டுமன்றி, உலகம் முழுவதும் பல நாடுகளிலும் சீனப் பொருள்கள் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள இன்றைய சூழலில், சீனப் புறக்கணிப்பு என்பது மிகவும் கடினமான ஒன்றுதான் என்றாலும் முடியாத ஒன்றல்ல. எவ்வாறு செயல்படுத்துவது?
பதில்: உண்மைதான், சீனப் பொருள்கள் புறக்கணிப்பு, செயலிகள் நீக்கம் என்பது சவாலான ஒன்றுதான். இருப்பினும், நிகழ்த்திக் காட்ட முடியாத ஒன்றல்ல. உலகில் பல காரியங்களை செய்து முடிப்பது மிகவும் கடினம்தான் என்பதை நானே கூட அடிக்கடி கூறி வந்திருக்கிறேன். ஆனால், சமண சமயத்தைச் சார்ந்த மக்கள் சமூகம் நமக்கு வழிகாட்டுகிறார்கள். அவர்களைப் பார்த்து நாமும் கற்றுக்கொள்ளலாம். வெங்காயம், பூண்டு, கேரட் போன்றவற்றை சமண சமயத்தினர் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். அவர்களது உணவில் இவை இல்லை. இருப்பினும், அவர்கள் வாழ்க்கையை செவ்வனே நடத்திச் செல்கிறார்கள். எனவே, எதுவும் சிரமமானது அல்ல, முடியாத ஒன்றுமல்ல. நாம் தீர்க்கமாக முடிவெடுத்து செயல்படுத்தினால், சூழலும் அதற்கேற்ப மாற்றம் பெறும்.
சமண சமய சமூகத்தினர் எங்கு சென்றாலும், அவர்களுக்கான உணவு இல்லாமல் இல்லை. எங்கும் கிடைக்கிறது. அவர்கள் விரும்பினால், வேகான் வேண்டுவோருக்கு வேகான் உணவும், சைவ உணவு வேண்டுவோருக்கு சைவ உணவும் பெற முடியும். சீன புறக்கணிப்பில் உள்ள சிரமங்களை, இந்தியா-சீனா எல்லையில் நமது ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுடன் ஒப்பிட்டால் எது உண்மையில் கடினம் என்பது நமக்கு புரியும். எல்லையில், உறைபனியின் கடும் குளிரில் தேச பாதுகாப்புக்காக பணிபுரியும் வீரர்கள் படும் கஷ்டத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், சீன செல்போன் செயலிகளை நீக்குவது அவ்வளவு சிரமம் இல்லை என்பது தெளிவாகும்.
மிகுந்த சிரமத்துக்கு இடையே எல்லையில் உள்ள வீரர்களின் நிலைமையுடன் ஒப்பிடும்போது, சீன செயலிகளை நீக்குவது ஒரு பொருட்டே இல்லை. செல் போனில் இருந்து ஒரு செயலியைக் கூட உங்களால் நீக்க இயலாது என்றால், என்னத்த சொல்ல?
கேள்வி: ‘விடு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற எதையும் ஒத்திப்போடும் சாதாரண இந்தியரின் மன நிலை உங்களை வாட்டுகிறதா?
பதில்: ஆமாம். எதையுமே சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் ’சல்தா ஹை’ என்ற விநோதமான அணுகுமுறை எனக்கு பெரும் கோபத்தை மூட்டுகிறது. ஒரு தேசம் என்ற அளவில் நாம் வீழ்ச்சி அடைவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டென்றால், அது இந்த ’சல்தா ஹை’ என்னும் அணுகுமுறைதான். இங்குதான், நாம் சீனர்களிடம் இருந்து சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். எடுத்த காரியம் எதையுமே, சீனர்கள் திறம்பட செய்துமுடிப்பதில் வல்லவர்கள். இதை நான் பல நேரங்களில் கவனித்திருக்கிறேன். சிறு விஷயம் என்றாலும் கூட, மிகவும் உன்னிப்பாக செயல்படும் அவர்களது திறமையும் விடாமுயற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கிறது.
இந்த மன நிலை, தற்போது ஊரடங்கு தளர்வுக்குப் பின்னான மக்களின் நடைமுறையில் வெளிப்படுகிறது. கடந்த சில மாதங்களில், கரோனா தடுப்பில் நாம் மேற்கொண்ட முயற்சிகளை, நமது செயல்பாட்டை உலகமே வியந்து பாராட்டியது. ஆனால், இந்த போக்கு அந்த புகழுக்கும் பெருமைக்கும் குந்தகம் விளைவித்துவிடும் என்ற கவலை உள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் நாம் மேற்கொள்ளாவிட்டால், கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா தோற்றுப்போகும் நிலைக்குத் தள்ளப்படலாம்.
இந்தியர்கள் விரைவாக வைரஸ் தொற்றுக்கு இலக்கானால், நாம் எவ்வாறு சீனாவை எதிர்கொள்வது? இதற்கு மாறாக, சீன குடிமக்களிடம் எப்போதும் இடையறாத பொறுப்புணர்வை நாம் காண முடியும். சீனர்களின் இந்த பொறுப்புணர்வே, அந்த தேசம் கரோனா பரவலைக் கட்டுக்குள் வைக்க முக்கிய காரணமாக அமைந்தது. இந்த குணங்களை சீனரிடம் இருந்து கற்றுக்கொள்வதுடன் நம்மை கட்டுப்பாடுடன் ஒழுங்குபடுத்திக் கொண்டால், கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் நாம் நம்பிகையுடன் இருக்கலாம்.
கேள்வி: சீனாவுடனான வர்த்தகத்தில், இந்தியா ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு இறக்குமதி செய்கிறது. மின்சாதன, மின்னணுப் பொருள்கள் மற்றும் இயந்திர தளவாடங்கள் ஆகியன இறக்குமதியில் 41 விழுக்காடு அளவுக்கு உள்ளது. இந்தச் சூழலில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, அதே பொருள்களை பிற நாடுகளில் இருந்து பெறுவதை நீங்கள் பரிந்துரைப்பீர்களா? உள்நாட்டு உற்பத்தி வாயிலாக இறக்குமதி செய்யும் பொருள்களை ஈடு செய்வது சாத்தியமாக தோன்றவில்லை. அந்த அளவுக்கு நம்மிடம் உற்பத்தித் திறன் இல்லையே?
பதில்: ஆம், கூடுமான அளவு நாம் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம், இந்த பொருள்களுக்கான நமது தேவையை நிறைவு செய்ய வேண்டும். உள்நாட்டு உற்பத்தி வாயிலாக நமது தேவையை பூர்த்தி செய்ய இயலாதபோது, பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் தவறில்லை. ஆனால், சில கொள்கைகளின் அடிப்படையிலேயே எந்த நாடுகளில் இருந்து இறக்குமதியைத் பெறுவது என முடிவெடுக்க வேண்டும். முக்கியமாக, மனித உரிமைகளை மதித்து, சூழலியல் வரைமுறைகளைப் பின்பற்றும் நாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதிக்கு அனுமதி தரவேண்டும். குறிப்பாக, அவை இந்தியா மீது நட்பும் நல்லெண்ணமும் கொண்டவையாகவும், நம் விவகாரங்களில் பிரச்னைக்குரிய விதமாக தவறாக நடந்து கொள்ளாதவையாகவும் இருக்க வேண்டும்.
பிறர் போட்டியிட முடியாத அளவு மிகக் குறைந்த விலைக்கு, சீனாவால் பொருள்களை விற்பனை செய்ய முடிகிறது என்றால், அதற்குக் காரணம் அந்நாட்டில் தொழிலாளர் சட்டங்களும், மனித உரிமைச் சட்டங்களும் மதிக்கப்படுவதே இல்லை என்பதே. எனவே, அங்கு உழைப்பு மிக மலிவாக கிடைக்கிறது. சுற்றுச் சூழலுக்கும், தொழிலாளர் நலனுக்கும் கிஞ்சித்தும் மரியாதை இல்லை. மேலும், சீன அரசு இரண்டையும் கட்டற்ற சுரண்டலுக்கு உட்படுத்தி, எந்த அளவுக்கு உறிஞ்சி எடுக்க முடியுமோ அந்த அளவு உறிஞ்சி எடுக்கிறது.
மேலும், போலிப் பொருள்களைப் பெருமளவில் சந்தையில் இறக்குமதி செய்வதில் சீனாவின் செயல்பாடு மிகவும் மோசம். இதன் காரணமாகவும், நாணய செலாவணி தகிடுதத்தம் மூலமும் சீனா மலிவாக உற்பத்திப் பொருள்களை பிற நாடுகளில் சந்தைப்படுத்துகிறது. எனவே நாம் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: சர்வதேச சமூகத்துடன் மட்டும் அல்லாது, சொந்த நாட்டு மக்களிடமும் இதே போக்கை கடைபிடிக்கும் சீனாவின் செயல்பாட்டுக்கு நாம் ஆதரவு தரலாமா?
மிகக் கொடுமையான உழைப்புச் சுரண்டல் மற்றும் சுற்றுச் சூழல் அழிப்பு உள்ளிட்ட அறமற்ற முறையில், சீனப் பொருள்களை பெருமளவில் உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கிறது. அவற்றை எளிதாக சந்தைப்படுத்துகிறது. சீனப் பொருள்களைப் புறக்கணிக்க இது மற்றுமொரு வலுவான காராணமாகும். இங்கு முக்கியமாக ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாம் எதிர்ப்பது சீன அரசை மட்டுமே, சீன மக்களை அல்ல.
கேள்வி: சீனப் பொருள்களைப் புறக்கணிக்குமாறு இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நீங்கள், இதில் பங்கேற்குமாறு பெரு வணிக நிறுவனங்களுக்கும், தொழில் துறைக்கும் அழைப்பு விடுப்பீர்களா?
பதில்: முதலில் எனது அழைப்பு, இந்திய மக்களுக்குத்தான். சீனாவுக்கு எதிரான இந்த தொடர் நடவடிக்கையை – அதனால் ஏற்படும் அசௌகரியத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் முதிர்ச்சியையும் அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர், இந்திய அரசையும் பெரு நிறுவனங்கள், வணிகர்கள் ஆகியோரின் ஆதரவைப்பெற அணுகுவேன். உள்நாட்டிலேயே நமக்குத் தேவையான உற்பத்தியைப் பெருக்குங்கள், உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கம் கொடுங்கள் என்பதே அவர்களிடம் நான் வைக்கும் ஒரே கோரிக்கையாக இருக்கும்.
கேள்வி: நமது நாட்டில் சீனா பெருமளவில் முதலீடு செய்ய விழைவதுடன், முன்னரே உள்ள முதலீடுகளை அதிகப்படுத்துகிறது. இந்த அந்நிய நேரடி முதலீடுகளின் தன்மை குறித்து அவற்றை கண்காணிக்க, அண்மையில் இந்திய அரசு சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. பொதுத்தளத்தில் நீங்கள் சீனாவைப் பற்றி எழுப்பிய பிரச்னைகளை அரசு கருத்தில்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என கூறலாமா?
பதில்: உள்நாட்டு தொழில் வணிக நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு, நமது அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கும் என்றால், அத்தகைய செயல்பாடுகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன். இந்திய நாட்டு மக்களுக்கு, சீனப் புறக்கணிப்புக்கான எனது அழைப்பு, முன்கூட்டியே திட்டமிட்ட ஒன்றல்ல. உணர்வுப்பூர்வமாக, எனது இதயத்தில் இருந்து எழுந்த ஒன்று. சீன ஆக்கிரமிப்பு, இந்திய இறையாண்மைக்கும் பெருமிதத்துக்கும் விடப்பட்ட சவால். நம் இறையாண்மையை கேலிக்குள்ளாக்கும் சீன நடவடிக்கையைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை. அதற்கான எதிர்வினையே இந்த செயல்பாடு.
கேள்வி: சீனாவின் எல்லை தாண்டிய அத்துமீறல் மற்றும் ஆக்கிரமிப்பு, அந்த பிராந்தியத்தில் சீனாவுக்குள்ள கடும் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக விளைந்ததா? லடாக்கில் உள்ள பாங்காங் ட்சோ ஏரியைக் கையகப்படுத்தி கூடுதல் தண்ணீரை எடுத்துக்கொள்ளும் வரம்பு மீறிய முயற்சியா?
பதில்: நாம் எல்லைக் கண்காணிப்பு கட்டமைப்பை மேம்படுத்தி, பாதுகாப்பை ஸ்திரப்படுத்தி, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு, சற்றும் விட்டுக்கொடுக்காமல் நமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். சீன ராணுவம் தற்போது பின்வாங்கினாலும், இன்னும் ஓரிரு வருடங்களுக்குள் மீண்டும் வரலாம் அல்லது வராமல் போகலாம். ஆனால், 1962ஆம் ஆண்டு நம்மிடம் இருந்து சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை சீன அரசு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதை நாம் அவசியம் வலியுறுத்த வேண்டும். எல்லையில் உள்ள கள நிலைமை 1962ஆம் ஆண்டு போருக்கு முன் எப்படி இருந்ததோ, அந்த நிலைக்கு சீன் துருப்புகள் திரும்ப வேண்டும் என்பதையும் வலியுறுத்துவது அவசியம். இந்த நிலப்பாட்டில் தடுமாற்றம் கூடாது.
கேள்வி: இந்த தருணத்தில் எமது ஈடிவி பாரத் நேயர்களுக்கு தாங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?
பதில்: தாய்நாட்டின் மீது பெருமை கொள்ளும் எந்த ஒரு குடிமகனுக்கும், தனது தேசம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கும். உலகமயமாக்கல் என்ற பெயரில், ஸ்பூன், ரொட்டி, வெண்ணெய் போன்ற மிகச் சாதாரண பொருள்களை எல்லாம் இறக்குமதி செய்கிறோம். இது தேவையா என சிந்திக்க வேண்டும், கொள்கைகளில் மாற்றம் வேண்டும். எனவே, நமது நோக்கமும் செயலும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் இருத்தல் அவசியம்.
சுற்றுச்சூழலுக்கு கேடற்ற, மாசற்ற பசுமை சார் உலக ஒன்றிணைவை நோக்கிய செயல்பாடுகளே இப்போதைய தேவை. எனது இந்த கோரிக்கை, நமது நாட்டு மக்களுக்கானது மட்டுமல்ல, அனைத்துலக மக்களுக்குமானது. அனைத்து நாடுகளுக்குமானது. எனது வீடியோவைப் பகிர்ந்து, ”சீனாவை மாற்ற உதவுங்கள்”. எனது குரல் திக்கெட்டும் பரவ உதவுமாறு உங்கள் நேயர்களைக் கேட்டுக்கொள்கிறேன். தயக்கமின்றி இந்த பணிக்கு கைகொடுங்கள். ஒன்றிணைவோம் வாருங்கள். இவ்வாறு கூறினார்.