குஜராத்தில் கட்ச் வளைகுடா, காம்பெத் வளைகுடா என இரு வளைகுடா பகுதிகள் இருக்கின்றன. இந்த இரு வளைகுடா பகுதிகளுக்கிடையில் சாலைப் போக்குவரத்து மட்டுமே இருந்து வந்தது. முக்கிய நகரங்களான சூரத், வதோதரா ஆகிய பகுதிகளிலிருந்து தஹேஜ் பகுதிகளுக்குச் செல்ல 360 கி.மீ. பயணிக்க வேண்டிய சூழல் நிலவியது. அதற்குக் கிட்டத்தட்ட 7 முதல் 8 மணி நேரம் வரை நேர விரயம் ஏற்பட்டது.
இந்த இரு வளைகுடா பகுதிகளுக்கு எளிதாகச் செல்லும் நோக்கில் கோகோ-தஹேஜ் இடையிலான ரோ-ரோ படகு சேவையைத் தொடங்கிவைப்பதே அந்நாள் குஜராத் முதலமைச்சர், இந்நாள் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமாக இருந்தது. இந்தத் திட்டம் 2012ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 296 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் முடிவடையும்போது இதன் செலவு 600 கோடி ரூபாயாக உயர்ந்தது.
2017இல் பிரதமர் மோடி இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 360 கி.மீ. சாலை வழியாகப் பயணம் செய்த மக்கள், இந்தப் படகு சேவை திட்டத்தின் மூலம் 31 கி.மீ. மட்டுமே பயணம் செய்தனர். ஒரு ரோ-ரோ படகில் 8 வாகனங்கள், 100 கார்கள், 500 பயணிகள் வரை பயணிக்க முடிந்தது. இதனால் குஜராத் மக்கள் பெரும் பயனடைந்தனர்.
10 மாதங்கள் எவ்வித சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்த படகு சேவை, அதன்பின் சில பிரச்னைகளை எதிர்கொள்ளத் தொடங்கியது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இரண்டு முறை ரோ-ரோ படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தஹேஜ் பகுதியில் உள்ள கடற்கரையில் மணல் அள்ளப்பட்டதால் படகு சேவையில் தடை ஏற்பட்டது. இதன் விளைவாக கடல் நீரின் அளவு குறைந்தது. இதனால் கப்பலை பெர்த்திங் புள்ளிக்குக் கொண்டு வர முடியாமல் பிரச்னைகள் வர, குஜராத் கடல் வாரியத்தால் இந்தப் பிரச்னைக்கு முடிவு கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் கப்பல் சேவை வழங்கும் நிறுவனம் மாதம் 18 லட்சம் ரூபாய் வரை இழப்பைச் சந்தித்தது. இதனால் கப்பலை விற்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
குஜராத் மாநில அரசின் மதிப்பு வாய்ந்த திட்டமாக அறியப்பட்டு வரும் கோகோ-தஹேஜ் படகு சேவை திட்டம், சில பிரச்னைகளை எதிர்கொண்ட சில மாதங்களிலேயே கைவிடும் நிலைக்கு வந்துள்ளது. இத்திட்டத்திற்காக 600 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ள நிலையில், அரசோ அல்லது படகு சேவை அளித்து வரும் இண்டிகோ நிறுவனமோ எவ்வித லாபத்தையும் ஈட்டவில்லை. குஜராத் கடல் வாரியத்தால் எவ்வித உதவிகளும் செய்யப்படாத நிலையில், படகு சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் படகு சேவை திட்டம் முடிவுக்கு வந்தால் தென்பகுதியில் இருக்கும் குஜராத் மாவட்டங்களிலிருந்து, சௌராஷ்டிரா பகுதிகளுக்குச் செல்ல மீண்டும் சாலை போக்குவரத்தையே பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகும். சில வணிகத் தொடர்புகள் நிறுத்தப்படும்.
ஏற்கனவே இந்தப் படகு சேவைக்கு முடிவுரை எழுதவிருந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் இன்னும் இந்தத் திட்டத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நடப்பு மாதத்திலிருந்து அனைத்து ஊழியர்களுக்கும் 50 விழுக்காடு ஊதியத்தை வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 33 ஊழியர்களில் 29 பேருக்கு 50 விழுக்காடு ஊதியம் வழங்கப்பட்டு, பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலைமை சரிசெய்யப்பட்டு மீண்டும் படகு சேவை தொடங்கும்போது, பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைவரும் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கைவிடப்படவுள்ள நிலையில், சேவையைத் தொடர்ந்து செயல்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: நாடு-நேடு திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் கோடி ஒதுக்கிய ஆந்திர முதலமைச்சர்