ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பேராசிரியரான டாக்டர் பிரையன் ப்ரிமேக் தலைமையிலான பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 120 நிமிடங்களுக்கும் குறைவாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு 300 நிமிடங்களுக்கும் மேலாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் இளைஞர்கள் ஆறு மாதங்களுக்குள் மனச்சோர்வை அடைவதற்கு 2.8 மடங்கு வாய்ப்புகள் அதிகம். சமூக வலைதளங்களுக்கும் மனச்சோர்வுக்கும் இடையேயுள்ள தொடர்பை விளக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு இதுவாகும்.
இது குறித்து ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார பேராசிரியரான டாக்டர் பிரையன் ப்ரிமேக், "மனச்சோர்வுக்கும் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கும் தொடர்பு உள்ளது என்பதை நாம் மற்ற பெரிய ஆய்வுகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
ஆனால், சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் மனச்சோர்வு அதிகரிக்கிறதா அல்லது மனச்சோர்வு அதிகரிப்பதால் சமூக வலைதளங்களை ஒருவர் அதிகம் பயன்படுத்துகின்றனரா என்பது குறித்து நம்மால் தெளிவாகப் தெரிந்துகொள்ள முடியவில்லை.
எங்கள் புதிய ஆய்வு இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளது. ஏனெனில் ஒருவர் சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்துவது அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்க வழிவகுத்தது. இருப்பினும், ஏற்கனவே மனச்சோர்வு இருக்கும் நபர்களின் சமூக வலைதளப் பயன்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை" என்றார்.
2018ஆம் ஆண்டு பிரையன் ப்ரிமேக் தலைமையிலான குழு 18 முதல் 30 வயதுவரை கொண்டு 1000 பேரிடம் இது குறித்த ஆய்வை நடத்தினர். அதில் பங்கேற்பாளர்களிடம் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், அவர்களது மனச்சோர்வு கணக்கிடப்பட்டது. இதில் வயது, பாலினம், இனம், கல்வி, வருவாய், பணி உள்ளிட்டவற்றைப் பொறுத்தும் முடிவுகள் கணக்கிடப்பட்டன.
இது குறித்து பேராசிரியர் டாக்டர் சீசர் எஸ்கோபார்-வயரா, "இதற்கு முக்கியமான ஒரு காரணமாக சமூக ஊடகங்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக இருக்கலாம். சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை பயன்படுத்துவதால் தனிப்பட்ட உறவுகளில் ஒருவருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதனால் இலக்குகளை அடைவதிலும் சிக்கலை எதிர்கொள்கின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: டிஆர்பி முறைகேடு - ரிபப்ளிக் தலைமைச் செயல் அலுவலருக்கு போலீஸ் காவல்!