கர்நாடக அரசு காவிரி ஆற்றில் குறுக்கே அணைகட்ட மேகேதாட்டு பகுதியைத் தேர்வு செய்து 25 கோடி ரூபாய் செலவில் முதல்கட்ட திட்டவரைவு அறிக்கையைத் தயார் செய்தது. சுமார் 5200 ஹேக்டேர் பரப்பளவில் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி இரு அணைகளைக் கட்ட திட்டவரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த வரைவை மத்திய நீர்வளத் துறையிடம் தாக்கல் செய்து திட்டத்திற்கான அனுமதியை கர்நாடக அரசு கோரியது. இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், இந்தத் திட்டத்தின் கீழ் வன நிலங்கள் வருவதால் இயற்கைச் சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது எனவும், அத்துடன் நிலம் கையகப்படுத்துதல் போன்ற சிக்கல்கள் உருவாகும் எனவும் கூறியுள்ளது. இதைக் களைவதற்கு நிபுணர் குழு மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் காவிரி நதி நீர் தொடர்பாகத் தமிழ்நாடு-கர்நாடகத்திற்கு இடையே சிக்கல் நீடித்துவரும் நிலையில் தற்போது இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கமுடியாது எனவும், இரு மாநிலங்களும் ஒருமித்த கருத்து எட்டியபின்பே இது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அண்மையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்திருந்தார். அதில் மேகேதாட்டு அணையானது கர்நாடக மாநிலத்தின் உள்விவகாரம் எனவும் இதற்குத் தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்ற வாதத்தை முன்வைத்திருந்தார். இந்நிலையில் கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்துள்ளது.