கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இறுதியாண்டு மாணவர்களின் எதிர்கால நலன்கருதி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகள் நடத்தப்படவேண்டும் எனவும், தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பல்கலைகழக மானியக் குழுவின் முடிவுகள் மாநில அரசைக் கட்டுப்படுத்தாது என டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றம் யுஜிசிக்கு உத்தரவிட்டிருந்தது.
இதுகுறித்து யுஜிசி அளித்துள்ள பதில் மனுவில், ”கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு இறுதித் தேர்வு நடத்துவது தொடர்பான முடிவுகளில் மாநிலங்களை கட்டுப்படுத்த முடியாது என்ற டெல்லி மற்றும் மகாராஷ்டிரா அரசின் வாதம் தவறானது. கரோனா வைரஸ் நெறிமுறைகளின்படி தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளுக்கு அதன் வழிகாட்டுதல்கள் போதுமான நேரத்தை வழங்குகின்றன.
ஆன்லைன், ஆஃப்லைன் அல்லது இரண்டு (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறைகளிலும் தேர்வுகளை நடத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விருப்பங்கள் கோரப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், யுஜிசிக்கு ஆதரவாக வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தேர்வுகள் நடைபெறாமல் இருப்பது மாணவர்களின் நலனை பாதிக்கும். தேர்வுகள் நடைபெறாவிட்டால் பட்டங்கள் அங்கீகரிக்கப்படாது. யுஜிசி மட்டுமே பட்டம் வழங்குவதற்கான விதிகளை பரிந்துரைக்கக்கூடிய ஒரே அமைப்பு. எந்த மாநிலங்களாலும் அவற்றை மாற்ற இயலாது. தொழில் வாய்ப்புகள் மற்றும் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றம் ஆகியவை தேர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என வாதிட்டார்.