காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியில் முக்கிய அமைச்சர்களில் ஒருவருமான டி.கே. சிவக்குமாரின் வீடுகளில் 2017ஆம் ஆண்டு வருமானவரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது டெல்லி வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது.
பணமோசடி வழக்கில் சிக்கிய டி.கே. சிவக்குமாரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 3ஆம் தேதி அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். பின்னர், சிறப்பு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திகார் சிறையில் சிவக்குமார் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிணைக் கோரி சிவக்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்குப் பிணை வழங்க அமலாக்கத் துறை கடுமையான எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், சாட்சியங்களை அவரால் கலைக்க முடியாது, வெளிநாடு செல்லவும் அவரால் இயலாது எனக் கூறி நீதிமன்றம் சிவக்குமாருக்கு பிணை வழங்கியது.
பிணை வழங்கிய பிறகு சிறையிலிருந்து வெளிவந்த சிவக்குமார், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?