டெல்லி: கோவிட் -19 நெருக்கடி காலகட்டத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களை நடத்துவது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிடுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த சில நாள்களக்கு முன்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது.
இந்தக் கூட்டத்தில் கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிக்கு இடையே தேர்தலை நடத்துவது தொடர்பாக மூன்று நாள்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் அலுவலர் அறிவுறுத்தினார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பரிந்துரைகளை வழங்கினார்கள்.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மெய்நிகர் மாநாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில் லோக் ஜன சக்தி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கிடையில் பிகார் மாநிலத்தில் தேர்தல் நடத்த தயாராகிவருவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
தற்போதைய நிலவரப்படி சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கும் பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், வாக்கெடுப்பு பகுதிகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் புதிய பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கையுறை, முகக்கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும். வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டியது கட்டாயம் எனவும், வாக்களிக்கும் போது தகுந்த இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படும்.
அதேபோல் தேர்தல் பரப்புரையின் போது, தகந்த தொலைதூர விதிமுறைகள் கடைப்பிடித்தலும் வழிகாட்டுதல்களில் சேர்க்கப்படும். வீடு வீடாக சென்று பரப்புரையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகபட்சம் மூன்றாக நிர்ணயிக்கப்படும். மேலும் பரப்புரை வாகனங்களுக்கும் ஐந்தாக குறைக்கப்படலாம்.
ஒவ்வொரு பேரணியிலும் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை மாவட்ட தேர்தல் அலுவலர் உறுதி செய்வார். வேட்புமனுத் தாக்கல் செய்யும் வேட்பாளருடன் வருவோரின் எண்ணிக்கையும் குறைக்கப்படும். இந்த வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: 'பிகார் மகா கூட்டணியில் பிளவு'- குஷியில் நிதிஷ் கட்சி!