கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போதைப்பொருள் விநியோகம் அதிகளவில் நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கன்னட பிரபலங்கள் பலரும் வரிசையாக சிக்கிகொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கீழ் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, ஹோட்டல் அதிபர்கள் விரேன் கண்ணா, முகமது அனூப், ராகுல் ஷெட்டி, பிரித்வி ஷெட்டி, முன்னாள் ஜனதா தள அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா உள்ளிட்ட 29 பேர் கைதுசெய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். மேலும், பலருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி முகமது அனூப் உணவக வைப்பதற்காக கேரள மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினிஷ் கோடியேரி ரூபாய் 50 லட்சம் வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால், இந்தப் பணம் வழங்கியது தொடர்பான முறையான ஆவணங்கள் உள்ளதா என்ற கேள்வி அலுவலர்களுக்கு எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி போதைப்பொருள் விநியோகத்தில் பினிஷூக்குத் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகித்த அமலாக்க துறையினர், நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பினர்.
அதன்படி இன்று, பினிஷ் கோடியேரி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி அலுவலர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்தார். போதைப்பொருள் விநியோகத்திற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என பினிஷ் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.