ட்ரோன்கள் என்னும் ஆளில்லா விமானத்தின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், பல நாடுகளின் பாதுகாப்புக்கும் அது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதேபோல், பாகிஸ்தானுக்குச் சொந்தமான ட்ரோன்கள் இந்திய எல்லையான பஞ்சாபில் உளவுபார்த்து வெடிபொருள்களைத் தரையில் இறக்கிய சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
இம்மாதிரியான தொழில்நுட்பங்களை சமூக விரோதிகள் பயன்படுத்திவருகின்றனர். இதனால், பல நாடுகள் தங்கள் எல்லையை எப்படி பாதுகாக்கப் போகின்றனர் எனக் கேள்வி எழுந்துள்ளது. பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள்தான் ட்ரோன்களை அதிகம் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், தற்போது தனி மனிதர்கள் ட்ரோன்களை பயன்படுத்துவதும் அதிகமாகியுள்ளது. ஆவணப் படங்களை எடுப்பதற்காகவும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காகவும்தான் பொதுமக்கள் ட்ரோன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் மட்டும் தற்போது ஆறு லட்சம் ட்ரோன்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய சந்தையில் ட்ரோன்களின் விற்பனை 88.6 அமெரிக்க டாலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளில்லா விமானங்களை கண்காணிக்க உலக நாடுகள் ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவருகிறது. ஆனால், அதனை ரேடார் தொழில்நுட்பம் துல்லிமாக கண்காணிக்க தவறியதால் அந்த முயற்சியும் தோல்வியைத் தழுவியுள்ளது. மோசமான பாதுகாப்பு நடவடிக்கைகளால் அமெரிக்காவில் தகவல் திருட்டு நடந்துள்ளது. தான் உருவாக்கும் ட்ரோன்களை வைத்து இதுபோன்ற தகவல் திருட்டில் சீனா தொடர்ந்து ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. சீனாவின் ட்ரோன்கள் விலைக்குறைவாக இருப்பதால், உலகில் பயன்பாட்டில் உள்ள 70 விழுக்காடு ட்ரோன்கள் சீனாவைச் சேர்ந்தவைகளாக உள்ளன.
ட்ரோன்களின் பயன்பாட்டை கட்டுக்குள் வைக்கும் விதமாக விமான போக்குவரத்து இயக்குநரகம் விதிகளை மாற்றியுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாய நிலங்களில் தெளிப்பதற்காக ட்ரோன்களை பயன்படுத்துவது மூலம் விவசாயிகளின் உடல் நலத்தை பாதுகாக்க முடியும். அவசரநிலையின்போது மக்களுக்கு மருந்து, அத்தியாவசியப் பொருள்கள் போன்றவற்றை வழங்குவதற்காக ஆளில்லா விமானத்தை பயன்படுத்தலாம்.
ட்ரோன்களைப் பயன்படுத்துவதில் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. ஆளில்லா விமானத்தின் பயன்பாட்டிற்கு அனுமதி பெறுவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆனால், இதனை ஒரு சிலரே பின்பற்றிவருகின்றனர். 50 மீட்டர் தொலைவில் மட்டுமே இயங்கும் 250 கிராம் எடையுள்ள ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு அனுமதி பெறத் தேவையில்லை.
பயங்கரவாத அமைப்புகள் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. இம்மாதிரியான தாக்குதலுக்கு பதிலடி தர ட்ரோன்களை பயன்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. குடியரசு தினம், தலைவர்களின் பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் இம்மாதிரியான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ட்ரோன்களை துல்லிமாக கண்காணிக்கும் தொழில்நுட்பம் இல்லாததால் பாதுகாப்புக்கு இது அச்சுறுத்தலாகவே உள்ளது. எனவே, இதனை பயன்படுத்த கடும் விதிகள் அமல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.