மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக தான் கருதவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 624 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 31 ஆயரித்து 223 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 62 ஆயிரத்து 218 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 17 லட்சத்து 81 ஆயிரத்து 841 பேர் பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி மகாராஷ்டிராவில் இதுவரை 48 ஆயிரத்து 648 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், காணொலி வயிலாகச் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, "மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அல்லது முழு நேர ஊரடங்கு அமல்படுத்துமாறு பொதுமக்கள் பலர் என்னிடம் பரிந்துரைத்தனர்.
மாநிலத்தின் நிலையைக் கருத்தில்கொண்டு, இரவு ஊரடங்கு அல்லது முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகத்தான் கருதவில்லை" என்றார்.