இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவா மாநிலத்தில் சிகிச்சைப் பெற்று வந்த ஏழு பேரும் குணமடைந்துவிட்டதாகவும்; தற்போது கோவா கோவிட்-19 தொற்று இல்லாத இடமாகத் திகழ்வதாகவும் அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்தார்.
கரோனா விஷயத்தில் அவசரம் காட்டத்தேவையில்லை என்று கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து கிரிஷ் சோடங்கர் கூறுகையில், "அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி இதுவரை 826 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 780 மாதிரிகளின் முடிவுதான் இதுவரை வந்துள்ளது. அதற்குள் கோவாவை கோவிட்-19 தொற்று இல்லாத இடமாக அறிவிக்க ஏன் அவசரம் காட்ட வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை, 16 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட கோவாவில் வெறும் 0.16 விழுக்காட்டினருக்கு மட்டுமே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, வெறும் ஏழாயிரம் அரசு ஊழியர்கள் 24 மணி நேரத்தில் 3.66 லட்சம் வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது அரசின் தரவுகள் மீது பெரும் சந்தேகத்தை எழுப்புகின்றது" என்றார்.
மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சோதனைகள் குறித்துப் பேசிய அவர், "1,794 பேர் வீட்டில் 202 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் 162 பேர் மருத்துவமனையில் என மொத்தம் 2 ஆயிரத்து158 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 28 நாள்களில் இந்த 2 ஆயிரத்து 158 பேருக்கும் வைரஸ் தொற்று பரிசோதனையை நடத்தாமல் வெறும் 780 பேருக்கு மட்டும் பரிசோதனையை நடத்தியது ஏன் என்பது குறித்தும் அரசு விளக்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: பீட்சா டெலிவரி பாயுடன் பணியாற்றிய 16 பேருக்கும் கரோனா?