கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவர் கலங்கரை விளக்கம் (லைட் ஹவுஸ்) பகுதியில் ஓட்டாடா மானே என்ற அசைவ உணவகம் நடத்திவருகிறார்.
அதுமட்டுமல்லாமல் ரத்த தானம் செய்பவர்களுக்கு தனது உணவகத்தில் இலவசமாக பிரியாணியை வழங்கிவருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "மங்களூருவில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனையில் ரத்த தானம் செய்பவர்களுக்கு நான் இலவசமாகப் பிரியாணி வழங்கிவருகிறேன்.
இதை நான் செய்யக் காரணம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எனது உறவினருக்கு ரத்தம் தேவைப்பட்டபோது, உணவகத்துக்கு வந்த ஒரு மாணவர் அவருக்கு ரத்த தானம் செய்தார்.
அவருக்கு நான் இலவசமாகப் பிரியாணி வழங்கினேன். அதைவிட்டுவிடாமல் தொடர்ந்து இன்றுவரை செய்துவருகிறேன்" என்றார்.
மேலும் அப்துல்லா, தனது உணவகத்தில் பல ஆண்டுகளாகப் பிப்ரவரி மாதத்தில் ரத்த தானம் முகாமையும் நடத்திவருகிறார். உணவக உரிமையாளர்கள் லாபம் ஈட்டுவதில் மட்டுமே ஆர்வம் செலுத்திவரும் நிலையில், உணவகத்துடன் சேர்த்து ரத்த தானம் செய்பவர்களை ஊக்குவிக்கும்விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் அப்துல்லாவை அப்பகுதி மக்கள், வாடிக்கையாளர்கள் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: பிரியாணி கடை, பியூட்டி பார்லர்...இப்போ பெட்ரோல் பங்க்...!