மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து யாரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை முடிவெடுக்க மேற்குவங்கத்தில் போராட்டம் செய்துவரும் மருத்துவர்கள், கொல்கத்தாவில் இன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் முடிவெடுக்கவுள்ளனர்.
இது குறித்து மருத்துவர்களின் செய்தி தொடர்பாளர் நேற்று இரவு பேசுகையில், "பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார். முதலமைச்சர் ஒரு கையை கொடுத்தால், 10 கையை கொடுக்க நாங்கள் தயார். இப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.
எங்கள் பணியை மீண்டும் தொடர நாங்கள் தயார். ஆனால் முதலமைச்சர் தரப்பிலிருந்து நேர்மையான முயற்சிகள் ஏதும் எடுக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இவ்விவகாரம் குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி விடுத்த அழைப்பை மறுத்த மருத்துவர்கள், மாறாகச் சம்பவம் நடந்த என்.ஆர்.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளிப்படையாக தங்களுடன் முதலமைச்சர் மம்தா பேச்சுவார்த்தைக்கு வருமாறு வலியுறுத்தினர்.