நாட்டின் தலைநகரில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துமாறு காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “மகாத்மா காந்தியின் இந்தியாவில் வன்முறைக்கு இடமில்லை.
பிரதமர், உள் துறை அமைச்சர், டெல்லி முதலமைச்சர் ஆகியோர் அரசியல் கூட்டாண்மை கருத்தின்படி செயல்பட்டு தேசிய தலைநகரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். வகுப்புவாத கலவரங்கள், வன்முறை, கல் வீச்சு, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தேசத்தின் நற்பெயரை சிதைத்துவிட்டன.
இச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது காந்தி, நேரு, படேலின் இந்தியா. எந்தவொரு இந்தியராலும் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.
மேலும், “சமுதாயத்தில் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு காங்கிரஸ் கட்சி அனைத்து வழிகளிலும் மத்திய-டெல்லி அரசுடன் நிற்கும்” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: டெல்லி வன்முறை: பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு