நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வரவிருக்கும் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் இயக்குநர் அம்ஜத் கான், குரானை அவமதித்ததாகக் கூறி நொய்டாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுருவிடமிருந்து ஃபத்வா பெற்றுள்ளார். குல் மக்காய் என்று பெயரிடப்பட்டுள்ள அவர் இயக்கிய இப்படம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அம்ஜத் கான், “இப்படத்தைத் தொடங்கியதிலிருந்து எனக்குப் பலரும் கொலை மிரட்டல் விடுத்தனர். இப்போது நொய்டாவைச் சேர்ந்த மதகுரு ஒருவர், எனது படத்தின் போஸ்டரை வைத்து புதிய சிக்கலை உருவாக்கியுள்ளார்.
பட போஸ்டரில் மலாலா ஒரு புத்தகத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் அவருக்குப் பின்னால் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்வதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில், அதொரு ஆங்கிலப் புத்தகம்தான். ஆனால் அப்புத்தகம் குர்ஆன் என்றும் இஸ்லாமிய புனித நூலை நான் இழிவுபடுத்துவதாகவும் கருதி நொய்டாவைச் சேர்ந்த மதகுரு, எனக்கு ஃபத்வா (இஸ்லாமிய மத அடிப்படையிலான தீர்ப்பு) வழங்கியுள்ளார். மேலும் என்னை அவர் காஃபிர் (இறைவனை முழுமையாக எதிர்ப்பவர்) என்றும் அழைத்தார்" என்று கூறினார்.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்க உள்ளீர்களா என்று நிருபர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “நான் கூறுவது எதையும் அவர் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. அமைதிக்காக படம் எடுத்துள்ள நான், காவல் நிலையத்தில் புகாரளித்தால் நான் படம் எடுப்பதில் எந்தப் பலனும் இல்லை” என்றார்.
ரீம் ஷேக், அதுல் குல்கர்னி, திவ்யா தத்தா ஆகியோர் நடித்துள்ள இப்படம் ஜனவரி 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சாதாரண பள்ளிக்குச் சென்றதிலிருந்து சிறுமிகளின் கல்வி உரிமைகளுக்காக தலிபான்களுடன் போராடும் ஒரு சமூக செயற்பாட்டாளராக அவர் மாறியது வரை மலாலா வாழ்க்கையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான மைக்ரோ-ஆல்கா ஸ்பைருலினா (IIMSAM) பயன்பாட்டிற்காக ஐநா சபை பிரதிநிதிகள், சர்வதேச அரசு நிறுவனத்தின் பிரதிநிதிகள், இந்திய, பாகிஸ்தான் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்தப் படம் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டனில் திரையிடப்பட்டது.
இதையும் படிங்க :சீனாவினை கொடுமைப்படுத்தும் கொரோனா 170ஆக உயிரிழப்பு அதிகரிப்பு!