பிகார் மாநிலத்தின் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரை களம் தற்போது தீவிரமடைந்துள்ளது. இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான மகா கூட்டணியும், முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும் நேருக்கு நேர் அரசியல் சண்டையிட்டு வருகின்றன.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான மகா கூட்டணியில் காங்கிரஸ், சி.பி.ஐ.,சி.பி.எம்., சி.பி.ஐ.(எம்.எல்) ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. மகா கூட்டணியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதியில் பிகாரில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இந்த வாக்குறுதி நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லாத ஒன்றென முதலில் விமர்சித்த பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, தற்போது தங்களது தேர்தல் வாக்குறுதியில் 19 லட்சம் பேருக்கு பிகாரில் அரசு வேலைவாய்ப்பை வழங்குவோம் என கூறியுள்ளது. பாஜகவின் இந்த புதிய தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்ச்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், " பிகார் அரசுத்துறைகளில் 10 லட்சம் வேலைகளை உருவாக்குவதாக உறுதியளித்த ஆர்.ஜே.டியின் தேர்தல் அறிக்கையை கேலி செய்த பாஜக, இப்போது 19 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளித்துள்ளது. 19 என்பது 10-ஐ விட சிறிய எண் என்று எனக்கு இத்தனை நாள்களாக தெரியாமல் போய்விட்டது. நான் மீண்டும் கணக்கு படிக்க தொடக்கப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.