ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்துள்ளது.
இதையடுத்து, ஸ்பைஸ்ஜெட்டின் விமான போக்குவரத்து தலைவர் குருசரண் அரோராவை மூன்று மாதங்களுக்கு பணியிடைநீக்கம் செய்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோழிக்கோடு விமான விபத்துக்குள்ளான சில வாரங்களுக்குப் பிறகு நாட்டின் விமான சேவைகளான ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்டவற்றில் தொடங்கியுள்ள சிறப்பு பாதுகாப்புத் தணிக்கை அனைத்து விமான நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், "கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் விமானங்களில் பணப்புழக்கம் குறைந்துவிட்டதால் தணிக்கை செய்வது முக்கியமானதாகும்.
அவர்கள் (விமான நிறுவனங்கள்) பணப்புழக்கத்தைப் பாதுகாக்க பல்வேறு வழிகளைக் கையாள முயற்சிக்கிறார்கள்.
விமான ஒழுங்குமுறை உருவாக்கிய அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் விமான நிறுவனங்கள் அனைத்தும் பின்பற்றுகின்றனவா என்பதைச் சரிபார்ப்பது முக்கியமாகும்" எனத் தெரிவித்தது.
விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கை குறித்து அறிந்துகொள்ள ஸ்பைஸ்ஜெட்டின் செய்தித்தொடர்பாளரை நமது ஈடிவி பாரத் சார்பாக தொடர்புகொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.