கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. முதலமைச்சராக ஜனதா தள(எஸ்) கட்சியைச் சேர்ந்தவரும் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி இருந்து வருகிறார்.
இதற்கிடையே மக்களவைத் தேர்தலில் குமாரசாமியின் மகனும், தேவகவுடாவின் பேரனுமான நிகில் குமாரசாமியும், ஹாசன் தொகுதியில் தேவகவுடாவின் மற்றொரு பேரன் பிரஜ்வலும் போட்டியிட்டனர்.
இவர்கள் இருவரது வேட்புமனு தாக்கலின் முன்பாக பேசிய தேவகவுடா, ‘ மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எனது பேரன்களுக்கு வாக்களிக்க வேண்டும். நான் இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன்’ என கண்ணீர் மல்க கூறினார்.ஆனால் சில நாட்களிலேயே தும்கூர் தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறங்கினார்.
இந்நிலையில், அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை என அவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியிருந்தது உண்மைதான். ஆனால் தற்போதைய சூழல் என்னை அரசியலில் போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளியுள்ளது. அதனால் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை” என்றார்.