டெல்லி: காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அகிலேஷ் பிரசாத் சிங், “மகா கூட்டணியிலிருந்து இந்துஸ்தானி அவாம் மோர்சா கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜித்தன் ராம் மஞ்சி வெளியேறியது துரதிருஷ்டவசமானது” எனக் கூறினார்.
இது குறித்து அகிலேஷ் பிரதாப் சிங் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், “பிகார் மகா கூட்டணியிலிருந்து ஜித்தன் ராம் மஞ்சி வெளியேறியது துரதிருஷ்டவசமானது. நாங்கள் இந்தப் பிரச்னை தொடர்பாக அவருடன் தொடர்ந்து பேசிவருகிறோம்.
அவர் எதற்காக மகா கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றார் என்று எனக்கு தெரியவில்லை. மகா கூட்டணியில் ஜித்தன் ராம் மஞ்சி தொடர்வதையே காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகிறார்கள்” என்றார்.
பிகார் மாநிலத்தில் வலுவான எதிர்க்கட்சியாக திகழும் மகா கூட்டணியில், லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், உபேந்திர குஷ்வாகா லோக் சமதா கட்சி மற்றும் நடிகர் முகேஷ் சாஹ்னி தலைமையிலான விகாசில் இன்ஷான் கட்சி உள்ளிட்டவை உள்ளன.
243 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட பிகார் மாநிலத்துக்கு இந்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பிகார் மகா கூட்டணியில் பிளவு'- குஷியில் நிதிஷ் கட்சி!