இந்தியாவின் பரபரப்பான விமான நிலையமான இந்திரா காந்தி இன்டர்நேஷனல் விமானநிலையத்தை இயக்கிவரும் டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனமானது (DIAL) 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் விமான நிலையத்தை நெகிழிகள் இல்லாத இடமாக மாற்றுவதாக அறிவித்திருந்தது.
மத்திய அரசானது 2022ஆம் ஆண்டுக்குள் நாட்டிலிருந்து ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களை அகற்றுவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப விமான நிலையத்தின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் அனைத்து ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருள்களையும் தடை செய்யும் வண்ணம் விமான நிலைய அலுவலர்கள் செயல்பட்டுவருகின்றனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், விமான நிலைய வளாகத்தில் நெகிழி பொருள்களை விலக்க உறுதிசெய்ய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து விமான நிலையத்திற்குள் தடை செய்யப்படும் பொருள்களில் மளிகைப் பைகள், உணவுப் பொட்டலப் பைகள், பாட்டில்கள், நெகிழி டப்பாக்கள், கப் ஆகியவை அடங்கும். பெரும்பாலான உணவுகளுக்கு நெகிழி பைகள் உபயோகப்படுத்தப்படும் நிலையை கருத்தில்கொண்டு, விமான நிலைய அலுவலர்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு கொடுக்காத துணி பைகளையும், காகித பைகளையும் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்திரா காந்தி இன்டர்நேஷனல் விமான நிலையத்திற்கு முன்பாகவே ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் விமான நிலையமானது நெகிழி பொருள் பயன்பாட்டை சீர் செய்ய கழிவு மறுசுழற்சி இயந்திரங்களை நிறுவியது.
இதையும் படிங்க: நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்க தீவிரம்காட்டும் சென்னை மாநகராட்சி