டெல்லியில் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற ஆம் ஆத்மி கட்சியின் பரப்புரைக்கு எதிராக, பாஜக இந்து - முஸ்லிம் என்ற பிரிவினைவாதப் போர் தொடுப்பதை அரவிந்த் கெஜ்ரிவால் வெகு விரைவிலேயே உணர்ந்துவிட்டார். இதனால் அதே இந்துத்துவா கொள்கையை மென்மையாக கையிலெடுப்பதுதான் உத்வேகமானது என கெஜ்ரிவால் எடுத்த முடிவால் டெல்லியில் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். பாஜகவின் மதவாத அரசியலை எதிர்ப்பதை விட, அவர்கள் பாணியிலேயே அதற்கு மருந்து கொடுத்து தீர்வு காண்பதுபோல் பதிலடி கொடுத்துள்ளார் கெஜ்ரிவால். எனவே தனது மக்கள் செல்வாக்குடன் இந்துத்துவாவையும் மென்மையாக இரண்டறக் கலந்ததன் மூலம் 3ஆவது முறையாக டெல்லி தேர்தலில் வெற்றியை பரிசாக வெல்ல முடிந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்னதாக கன்னாட்பிளேசில் உள்ள ஹனுமன் கோயிலுக்கு கெஜ்ரிவால் சென்று தரிசித்தார். கெஜ்ரிவாலின் இந்த ஹனுமன் தரிசனத்தை, டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியோ, பக்தர் போல போலி வேடம் தரிப்பதாக கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தார். அதுமட்டுமின்றி, கெஜ்ரிவாலின் கால் பட்டதால் கோயிலின் புனிதம் களங்கமாகி விட்டதாகவும் குற்றம்சாட்டினார். ஆனால் மனோஜ் திவாரியின் இந்தக் குற்றச்சாட்டுகள் டெல்லிவாசிகளிடம் எடுபடவில்லை. இது மட்டுமா? ஹனுமன் பக்தர் தொடர்பான விமர்சனங்களைத் தொலைக்காட்சி நேரலையில் விவாதிக்க விடுக்கப்பட்ட சவாலை, கெஜ்ரிவால் மிக எளிதாகவும் திடமாகவும் எதிர்கொண்ட விதம் பார்வையாளர்களின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது என்பதும் உண்மை.
அது மட்டுமின்றி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் விஸ்வரூபமெடுத்த போதும், கெஜ்ரிவால் நடந்துகொண்ட விதம் அவருடைய ராஜதந்திரத்திற்கு சிறந்த உதாரணம். குடியுரிமை விவகாரத்தில் எந்தவித அரசியல் நிலைப்பாடும் எடுக்காமல் நடுநிலை காத்ததும் கெஜ்ரிவாலின் வெற்றிக்கு காரணம் என்றும் கூறலாம். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் தீவிரமாகக் கையிலெடுத்த போதும், அக்கட்சியால் இஸ்லாமியர் வாக்குகளை அறுவடை செய்ய முடியவில்லை. டெல்லியில் உள்ள 13% இஸ்லாமிய வாக்காளர்களும் ஆம் ஆத்மிக்கு ஆதரவாகவே ஏகமனதாக வாக்களித்துள்ளனர். பாஜகவுக்குச் சரியான எதிரி ஆம் ஆத்மி தான் என முடிவெடுத்த டெல்லி வாக்காளர்கள் காங்கிரசை புறந்தள்ளிவிட்டனர் என்றே கூறலாம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இஸ்லாமியர்களின் தொடர் போராட்டங்களால் இந்துக்களின் அன்றாட வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக பாஜக கடுமையாக விமர்சித்தது. பாஜகவின் இந்தக் கருத்தால், போராட்டங்களைக் கைவிட வேண்டுகோள் விடுத்தவரும் கெஜ்ரிவால் தான். அதே வேளையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக பிப்ரவரி 5ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பையும் கெஜ்ரிவால் வரவேற்றார்.
இதன் மூலம் இந்துக்களின் நம்பிக்கையையும் கெஜ்ரிவால் பெற்றார். இந்துக்களின் எதிரி என்பது போல பாஜக தம்மை விமர்சிப்பதற்குப் பதிலடி கொடுப்பது போல, வயதான இந்துக்கள் புனித யாத்திரை செல்ல இலவச பயணம் என்ற சலுகையை கெஜ்ரிவால் அறிவித்தார். அது மட்டுமின்றி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை ரத்துசெய்த மத்திய அரசின் நடவடிக்கையை கெஜ்ரிவால் ஆதரித்ததையும் டெல்லி மக்கள் மறந்து விடவில்லை. டெல்லியில் ஓடும் யமுனை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தைக் கையிலெடுத்து கடவுள் கிருஷ்ணரின் நதி என உச்சரித்தும் இந்துக்கள் மனதில் இடம்பிடித்தார் கெஜ்ரிவால்.
பாஜக எம்.பி.யான பர்வேஷ் வர்மா என்பவர், கெஜ்ரிவாலை ஒரு தீவிரவாதி என விமர்சித்தபோது அதனையும் புத்திசாலித்தனமாக எதிர்கொண்டார் கெஜ்ரிவால். தாம் தீவிரவாதியா? அல்லது டெல்லியின் மைந்தனா? என்பதை டெல்லிவாசிகளே முடிவு செய்யட்டும் என தமது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்களை பட்டியலிட்டு மக்களின் அனுதாபத்தை அறுவடை செய்தார். இப்படி கெஜ்ரிவால் மேற்கொண்ட மென்மையான இந்துத்துவா அணுகுமுறை, வளர்ச்சிப் பணிகள், மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவைதான் அவருக்கு டெல்லியில் அமோக வெற்றியைப் பரிசாக தந்துள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.