டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மூன்று நாட்களாக நிலவிவரும் வன்முறையால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கலவரத்தைத் தடுக்க காவல்துறை தவறியதாகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்கு முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளனர்.
டெல்லியில் உள்ள விஜய் சௌக் பகுதியில் இருந்து குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி பேரணி மேற்கொள்ளும் இவர்கள், குடியரசுத் தலைவரைச் சந்தித்து டெல்லி கலவரம் குறித்து முறையீடு மேற்கொள்ளவுள்ளனர்.
இதில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியுடன் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், கே.சி. வேணுகோபால், அகமது பட்டேல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட மூத்தத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இதற்கு முன்னதாக டெல்லி வன்முறை சம்பவம் குறித்து, தனது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் காங்கிரஸ் கட்சித் தலைமை, ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
வட கிழக்கு டெல்லியில் வெடித்த கலவரம் தொடர்பாக இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டு, 18 பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி கலவரம்: சாட்டையைச் சுழற்றிய நீதிபதி அதிரடி இடமாற்றம்