கரோனா பெருந்தொற்றுக்கு நடுவிலும், டெல்லி பல்கலைக்கழகம் 2020-21ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு மாணவர்கள் டெல்லி பல்கைலக்கழக நுழைவுத்தேர்வில் பங்குபெறுவார்கள்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தைவிட ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை டெல்லி பல்கலைக்கழகம் இருமடங்கு உயர்த்தியுள்ளது. இது, ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு ஓபிசி மாணவர்கள் 250 ரூபாயும், நுழைவுத்தேர்வுக் கட்டணமாக கூடுதலாக 750 ரூபாயும் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முதுகலைப் பாடப்பிரிவுகளுக்கு ஒபிசி மாணவர்கள் 750 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
பட்டியலின, பழங்குடி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பு மாணவர்களுக்கு இளங்கலை, முதுகலைப் பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் முறையே ரூ.100, ரூ.300ஐ நிர்ணயித்துள்ளது.
இதன்மூலம், பொதுப்பிரிவு மாணவர்களும், ஓபிசி மாணவர்களும் ஒரே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை திமுக வன்மையாகக் கண்டித்திருக்கிறது. இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், "அரசியல் அமைப்பை வடிவமைத்தவர்கள் பொருளதார ரீதியிலான இடஒதுக்கீட்டு முறையைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர்கள், காலம்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கான ஆயுதமாக இடஒதுக்கீட்டை வடிவமைத்தார்கள். தற்போது, ஓபிசி மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது அநீதியாகும்.
ஓபிசி மாணவர்கள் நுழைவுத் தேர்வுகூட எழுதிவிடக் கூடாது என்ற எண்ணத்தால் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்குப் போராட ஆட்சியிலும், அதிகாரத்திலும் பிரதிநிதிகள் உள்ளனர்.
ஆனால், அம்மாதிரியான பிரதிநிதிகள் ஓபிசி வகுப்பினருக்குப் போராடுவதற்கு இல்லை. எனவே, பட்டியிலன, பழங்குடியின, பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பு மாணவர்களுக்கான அதே கட்டணத்தையே ஓபிசி மாணவர்களுக்கும் விதிக்க வேண்டும்" என்றார்.
இது தொடர்பாக சில மாணவர்கள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் ராஷ்மிகா என்னும் மாணவி எழுதிய கடிதத்தில், "பொதுப்பிரிவினரும், ஓபிசி பிரிவினரும் சமூக, பொருளாதார ரீதியில் சமமான நிலையில் இல்லை.
ஆனால், டெல்லி பல்கலைக்கழகம் இரு பிரிவு மாணவர்களுக்கும் ஒரே கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது. இது ஓபிசி மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல: உச்ச நீதிமன்றத்தின் புரிதல் குறித்து சட்டவல்லுநர்களின் கருத்து!