உலகளாவிய தொற்றுநோயான கரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் பல்வேறு தொழில்களைப் பாதிப்படைய செய்துள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் அந்நியச் செலாவணியை அதிகளவில் ஈட்டித்தந்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையானது, முற்றுமுழுதாக தனது வருவாயை இழந்துள்ளது.
இருப்பினும், சில உணவகங்கள் மனிதநேய சிந்தனையோடு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வறியவர்களுக்கு உணவுகளை வழங்கிவந்தன.
அந்த வகையில், டெல்லி-என்.சி.ஆர் பகுதிகளில் இயங்கிவரும் தி மார்க்கெட் பிளேஸ், ஜோஷ்-தி ஹை எனர்ஜி பார், ஸ்வாகத் ரெஸ்ட்ரோ பார் போன்ற உணவகங்கள் மியான்மரிலிருந்து இந்தியாவிற்குள் தஞ்சமடைந்த ஏதிலிகளுக்கு விலையில்லா உணவுகளை வழங்கிவருகின்றன.
இந்து மக்களின் மிக முக்கியப் பண்டிகையான நவராத்திரி விழாவை முன்னிட்டு டெல்லி ஜசோலா குடிசைப் பகுதியில் வசித்துவரும் ரோஹிங்கியா ஏதிலிகளுக்கு விலையில்லா உணவை அவர்களது இருப்பினங்களுக்கு நேரில் சென்று வழங்கிவருகின்றனர்.
இது தொடர்பாக நமது ஈடி.வி பாரத்திற்காக ஜோஷ்-தி ஹை எனர்ஜி பார் மற்றும் தி மார்க்கெட் பிளேஸின் உரிமையாளர் சிவம் சேகலிடம் பேசியபோது, "உணவுக்கு இன, மொழி, மத, பண்பாட்டு என எந்த வேற்றுமையும் இல்லை; அதை பிறருக்கு அளிக்க வேண்டுமென யார் விரும்பினாலும், யாருக்கு வேண்டுமானாலும் அளிக்கலாம்.
திருவிழா என்ற கொண்டாட்டம் எல்லோரையும் போல எனக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் ஒரு நிகழ்வே. அந்த மகிழ்ச்சியை எல்லாருடனும் பகிரவே விலையில்லா உணவுகளை வழங்கும் பணியில் நாங்கள் ஈடுபடுகிறோம். அந்த ஏழை மக்களிடமிருந்து வரும் ஆசீர்வாதங்கள் எனக்கு நிறைவை வழங்குகிறது. தேவைப்படுபவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட பிற அத்தியாவசியப் பொருள்களை வழங்குவது என்பது இந்திய பண்பாட்டின் ஒரு பகுதி. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
மியான்மரிலிருந்து மட்டுமல்ல பிற நாடுகளிலிருந்தும் வந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியா மக்கள் மத்தியில், அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றி உணவுகளை கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி முன்னெச்சரிக்கையுடன் உணவு விடுதியின் பணியாளர்கள் விநியோகித்துவருகின்றனர்.
இது குறித்து ரோஹிங்கியா ஏதிலி மொஹமட் ஷிராஜுல்லா கூறுகையில், "பர்மா விட இந்தியாவில் நாங்கள் மிகுந்த பாதுகாப்புடன் வாழ்ந்துவருகிறோம்.
இங்குள்ளவர்கள் மனிதாபிமானத்துடன் உணவு, தங்குமிடம் என எங்களுக்கு நிறைய உதவிகளை செய்கிறார்கள். கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், ஊரடங்கு நேரத்திலிருந்து இன்று வரை இந்திய மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருள்களை எங்களுக்கு வழங்கி உதவிவருகின்றனர். எங்களுக்கு உதவியதற்கு நாங்கள் இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.