முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் சீக்கிய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக, டெல்லியில் சீக்கிய இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது. சீக்கியப் படுகொலை நடைபெற்று 36 ஆண்டுகளான நிலையில், அதை கண்டிக்கும் விதமாக நவம்பர் 5ஆம் தேதி டெல்லியிலிருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்துக்கு சீக்கிய தீவிரவாத அமைப்பு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
சீக்கியர்களுக்கான நீதி என்ற தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பயங்கரவாத அச்சுறுத்தல் வெளியிட்ட நிலையில், டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர் சிங் பன்னூன் வெளியிட்ட வீடியோ செய்தியில், "ராஜீவ் காந்தியிலிருந்து மோடி வரை நடைபெற்ற அனைத்து ஆட்சிகளும் சீக்கியப் படுகொலையை மறைக்கவே செய்தன. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக காங்கிரஸ் பாஜக கட்சிகள் விளங்குகின்றன" என்றார்.
தேசிய தலைநகர் டெல்லியில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் புலனாய்வு அமைப்பு டெல்லி காவல்துறையை எச்சரித்துள்ளது. மத்திய தொழில் காவல் படையும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.