டெல்லியில், இன்று (செப்.02) மாவட்டப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கஹ்லோட் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
டெல்லி மெட்ரோ சேவைகள் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள நான்காம் கட்ட ஊரடங்குத் தளர்வில் மெட்ரோ சேவைகளை மீண்டும் தொடங்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, டெல்லியில் மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி) செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தனது சேவைகளை சிறிது சிறிதாக மீண்டும் தொடங்கப்போவதாக அறிவித்தது. இதற்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ஒப்புதல் அளித்துள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை பயணிகள் பின்பற்றுவதை, டெல்லி அரசாங்கம் உறுதி செய்யும் எனப் போக்குவரத்து துறை அமைச்சர் முன்னதாக கூறியிருந்த நிலையில், மெட்ரோ ரயில் இயக்கத்தால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்படும் என அனில் பைஜால் தெரிவித்துள்ளார்.