இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 53 ஆயிரத்து 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் டெல்லியில் மட்டும் 5 ஆயிரத்து 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று மட்டும் ஒரே நாளில் கரோனா வைரசால் 428 பேர் பாதிக்கப்பட்டது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்தர் ஜெய்ன் பேசுகையில், ''கடைசி 24 மணி நேரத்தில் 428 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 5 ஆயிரத்து 532 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆயிரத்து 542 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட 82 பேர் அவசர சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 12 பேருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் கரோனா வைரஸ் இரட்டிப்பாகும் நாள்கள் 13இல் இருந்து 11ஆக குறைந்துள்ளது. திடீரென கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணம், இதுவரை பரிசோதனை முடிவுகள் வராமல் இருந்த நபர்கள் அனைவருக்கும் பரிசோதனை முடிவுகள் வேகமாக வருவதால் தான்.
கரோனா வைரஸ் பரவலைக் கண்காணிப்பதற்காக விதிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரப் பணியாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்'' என்றார்.
இதையும் படிங்க: ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், அதிசயமா! ஆபத்தா? ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல்!