டெல்லியில் மூன்று பேர் கொரோனா (கோவிட் 19) வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுடன் விவாதிக்கவுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளுடான போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டும். இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுடன் சந்தித்துப் பேசவுள்ளேன்.
ஏனென்றால், இதுவரை கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இதுபோன்ற நாட்டிலிருந்து வந்தவர்கள்.
டெல்லியில் இதுவரை மூன்று பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முதல் நபர் 105 பேரையும் இரண்டாம் நபர் 168 பேரையும் மூன்றாம் நபர் 64 பேரையும் தொடர்புகொண்டுள்ளனர்.
அவர்கள் அனைவரையும் தற்போது வீட்டில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பரிசோதனை முடிவுகள் வெளியான பின் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.
டெல்லி அரசு சார்பில் எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், "டெல்லி விமான நிலையம் வரும் பயணிகளைப் பரிசோதிக்க 40 மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை" என்றார்.
முன்னதாக கோவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக இத்தாலி, தென் கொரியா, ஈரான், ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கு வழங்கப்பட்ட நுழைவு இசைவுகள் (விசா) அனைத்தையும் ரத்துசெய்வதாக மத்திய அரசு மார்ச் 3ஆம் தேதி அறிவித்தது.
இதையும் படிங்க: கேரளாவில் மூன்று வயது குழந்தைக்கு கொரோனா!